×

புதுவை அரசு ஆலையில் சாராயம் திருட்டு உண்மையை நிரூபித்தால் சேர்மன் பதவியை ராஜினாமா செய்ய தயார்: அதிமுக எம்எல்ஏவுக்கு பெண் எம்எல்ஏ சவால்

புதுச்சேரி: அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர்மன் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பெண் எம்.எல்.ஏ. சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி சாராய வடி ஆலை தலைவரும், எம்எல்ஏவுமான விஜயவேணி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக எம்எல்ஏ வையாபுரிமணிகண்டன், புதுச்சேரி அரசு சாராய வடி ஆலையில் ஊரடங்கு சமயத்தில் 6 டேங்கர் லாரியில் 10 லட்சம் லிட்டர் சாராயம் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி இந்த அரசின் மீதும், நான் தலைவராக பதவி வகிக்கும் புதுச்சேரி அரசின் சாராய வடி ஆலை நிர்வாகத்தின் மீதும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு கூறியுள்ளார்.

புதுச்சேரி சாராய ஆலை, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க கூடியது. மேலும் கலால்துறையின் பர்மிட் இருந்தால் மட்டுமே சாராயம் வெளியில் எடுத்து வர முடியும். அப்படி இருக்கும்போது அவர் என் மீது இருக்கும் காழ்ப்புணர்வு காரணமாகவே பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். காரணம் இவர் மீது நான் ஏற்கனவே சட்டப்பேரவை தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அது இன்றுவரை நிலுவையில் உள்ளது. இதை மனதில் வைத்து நான் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதை உண்மை என்று நிரூபித்துவிட்டால் சேர்மன் பதவியை ராஜினாமா செய்கின்றேன். அவர் கூறியுள்ளதை நான் பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ள தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Puducherry ,Liquor Store ,government plant , Puducherry government plant, booze theft, resignation of chairman, AIADMK MLA, female MLA
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...