×

கேரளாவிலிருந்து பென்னாகரத்திற்கு நடந்தே வந்த வியாபாரி மாரடைப்பால் சாவு: மகராஷ்டிரா புறப்பட்ட தொழிலாளி பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து பலி

பென்னாகரம்: ஊரடங்கால் போக்குவரத்து வசதியில்லாததால், கேரளாவிலிருந்து பென்னாகரத்திற்கு நடந்ேத வந்த பாய் வியாபாரி மாரடைப்பால் உயிரிழந்தார்.  தேனியில் இருந்து மகராஷ்டிராவுக்கு செல்ல மதுரை ரயில் நிலையத்துக்கு பஸ்சில் சென்ற தொழிலாளி படிக்கட்டில் இருந்து விழுந்து இறந்தார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி, சிடுமனஅள்ளி பழையூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன்(50). இவரது மனைவி அலமேலு. 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன், கேரளாவில் பாய் வியாபாரம் செய்ய சென்றார் மகேந்திரன். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவித்த அவர், 3 நாட்களுக்கு முன்பு நடைபயணமாக புறப்பட்டார்.

250 கி.மீ தூரம் இரவு, பகலாக நெடுஞ்சாலையில் வந்துள்ளார். பசியால் தவித்த அவர், ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் நேற்று மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான பென்னாகரம் அருகே உள்ள சிடுமனஅள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.தொழிலாளி பலி: தேனி மாவட்டத்தில் பணி புரிந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 686 கூலித்தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக, 21 பஸ்கள் மூலம் மதுரை ரயில் நிலையத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.

இதில், தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டியில் இருந்து 103 தொழிலாளர்களை 3 பஸ்களில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். காட்ரோடு முனியாண்டி கோயில் அருகே, சிவாஜி ராம்பவார் (45) என்ற தொழிலாளி எச்சில் துப்புவதற்காக பஸ் படிக்கட்டில் இறங்கியுள்ளார்.  இதில், எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து சிவாஜி ராம்பவார் மனைவி வைஷ்ணவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை இறக்கி விட்டுவிட்டு பஸ் புறப்பட்டு சென்றது.


Tags : Kerala Dealer ,Maharashtra , Kerala, Pennagaram, dealer, heart attack, death, Maharashtra, worker
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...