×

தமிழக அரசு அவசர சட்டம் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம்

சென்னை:  ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அவசரம் சட்டம் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 2017 முதல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் வணிக வரித்துறை சார்பில் சரக்குகளுக்கு மட்டுமே வரி வசூலித்து வந்த நிலையில், தற்போது சேவைகளுக்கு சேர்த்து மாநில அரசு வரி வசூலிக்கிறது. 3 விதமான வரி விகிதம் வசூலிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் பிரித்து கொள்கிறது. இதில், சரக்குகள் மற்றும் சேவை வரி செலுத்தும் 9 லட்சம் வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், உற்பத்தி பிரிவை சேர்ந்த வணிகர்கள் வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு ₹5 லட்சம் என்றும், மாநிலத்துக்குள் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வணிகர்களுக்கான வரி வரம்பு ₹10 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் வரவு, செலவு மற்றும் இருப்பு பொருட்கள் குறித்த கணக்கு விவரங்களை அந்தந்த மண்டல வணிகவரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. இதனால், மார்ச் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய கணக்குளை பெரும்பாலான வணிகர்கள் ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, 18 சதவீதம் வரை கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதமும் ஊரடங்கு நீடித்ததால் கணக்குகளை சமர்ப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இந்த நிலையில் கணக்குகளை தாக்கல் செய்ய தவறும் பட்சம் அபராதம் வசூலிக்கப்படுவதும், 2 மாதங்களில் தாக்கல் செய்யாவிட்டால் பதிவு ரத்து  செய்யப்படும் என்ற நிலையில் கால அவகாசம் வழங்க வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று மத்திய அரசு சார்பில் கணக்குகளை தாக்கல் செய்ய வரும் ஜூன் 30ம் தேதி கால அவகாசம் நீட்டிக்கலாம் மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது. இது தொடர்பாக மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தது. அதன்பேரில் வரும் ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.


Tags : Tamil Nadu Government Emergency Law GST Account , Government of Tamil Nadu, GST Account,
× RELATED புதுச்சேரியில் முழு ஊரடங்கு மேலும்...