×

வழக்குப்பதிவு செய்து 72 நாட்களுக்குப் பிறகு திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கைது: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது

சென்னை: வழக்குப்பதிவு செய்து 72 நாட்களுக்குப் பிறகு திமுக எம்பியும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியை, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.  சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி கலைஞர் வாசகர் வட்டாரம் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகின. இதையடுத்து, தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி மீது ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் தேனாம்பேட்டை போலீசுக்கு மாற்றப்பட்டது. புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவுக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் வீட்டிற்கு சென்றனர்.  அப்போது, போலீசாரிடம் தான் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த போலீசார் கைது செய்யவுள்ளதாக தெரிவித்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆர்எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானதும், மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீசார் விடாப்பிடியாக பாரதியை தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிபதி செல்வகுமார் வீட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்தவுடன் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தனர்.

இதற்கிடையே, ஆர்.எஸ்.பாரதியை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரியும் திமுக மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மனு தாக்கல்  செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள், “அவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவுகள் வெளிவந்தன. இருந்தபோதிலும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பிறகு 2 மாதங்கள் கழித்து அவரை கைது செய்துள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்ததால்தான் அவர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு அவசர அவசரமாக அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அவரை கைது செய்தது சரியான நடவடிக்கை அல்ல. எனவே, அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்”. அவருக்கு ஜாமீன் வழங்ககூடாது என்று தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் ஜூன் 1ம் ேததி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Tags : Bharathi ,DMK ,Chennai Sessions Court ,Madras High Court , Case Record, DMK MP RS Bharathi, Arrested, Chennai Main Sessions Court
× RELATED திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...