×

மீண்டும் கேட்கிறது டம்... டம்... சத்தம் நலிவடைந்த சிறுகுறு தொழில்கள் மீள அரசு உதவிக்கரம் நீட்டுமா?: எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்

நெல்லை: நெல்லை பேட்டை பகுதியில் சிப்காட் மற்றும் பிற பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகளான சில்வர், அலுமினிய, செம்பு, பித்தளை பட்டறைகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், மர ஆலைகள், லேத்துகள், மெத்தை தயாரிக்கும் நிறுவனங்கள், பீரோ கட்டில், மேஜை தயாரிக்கும் நிறுவனங்கள், காகித ஆலைகள், ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த இந்நிறுவனங்கள், 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் இயங்க துவங்கி உள்ளன. இதனால் பாத்திர உற்பத்தி, பீரோ கட்டில் தயாரிப்பு என சிறுகுறு தொழில்கள் மூச்சு வாங்க துவங்கியுள்ளன.

கடந்த 2 மாத காலமாக பிழைப்பிற்கு வழியின்றி விழி பிதுங்கி நின்ற தொழிலாளர்கள் வாழ்விற்கு விளக்கேற்றியதுபோல் நிறுவனங்கள் திறப்பு அமைந்தாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் தொழிலாளர்கள் மட்டுமின்றி உரிமையாளர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.பஸ், ரயில்கள், விமானம் போன்ற போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில், தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமல் சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட வழி தெரியாமல் திணறுகின்றன. மேலும் உற்பத்தியாகியிருந்த, தற்போது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்தி மாவட்டம் விட்டு மாவட்டம் அல்லது வேறு மாநிலங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதிலும் இ-பாஸ் வாங்க வேண்டும் போன்ற உத்தரவுகளால் சிக்கல் நீடிக்கிறது.

கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில்தான் அதிகளவில் சுப நிகழ்ச்சிகளும், திருவிழாக்களும் நடைபெறும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளாலும், மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதாலும் விற்பனை முடங்கி கிடக்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேக்கமடைந்து உள்ளன. இதன் காரணமாக வேலை நடந்தாலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். இதன் காரணமாக பணி செய்தாலும் வீட்டு வாடகை, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் தொழிலாளர்கள் வழியின்றி தவித்து வருகின்றனர். சிறு குறு தொழில் முனைவோரின் தேவையறிந்து அவர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்க அரசுத்துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொழிலாளர்களும் பற்றாக்குறை
பேட்டை பகுதியில் உள்ள சிறுகுறு தொழில் நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது ஊரடங்கில் வேலைவாய்ப்பை இழந்த அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். வடமாநில தொழிலாளர்கள் பணி செய்யும்போது விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களில் வேலை பார்த்து வந்தனர். இதனால் சமச்சீரான உற்பத்தி இருந்தது. கொரோனா பீதி அடங்கி வடமாநில தொழிலாளர்கள், வேலைக்கு திரும்பினால் மட்டுமே எதிர்பார்த்த உற்பத்தி இருக்குமென நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Tags : businesses ,Government ,Expectation Owners , Small businesses, Tamil Nadu government, owners and workers
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...