×

10 மாவட்டத்தில் சதமடித்த உக்கிர வெயில் மேலும் 2 நாள் அனல்காற்று நீடிக்கும்: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வட மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசுவதால் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும். தமிழகத்தில் தற்போது அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் குளிர்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், கேரளாவை ஒட்டி கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதனால் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.  அதில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 70 மிமீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி, எடப்பாடி 50மிமீ, சிவலோகம், விருதுநகர் 40மிமீ, சங்ககிரி, ஏற்காடு 30 மிமீ, திருச்செங்கோடு, ராயக்கோட்டை, பாலக்கோடு, கோத்தகிரி, சிவகாசி, பரூர் 20மிமீ, மாரண்டஹள்ளி, தர்மபுரி, பெனுகொண்டாபுரம், தளி, போச்சம்பள்ளி, ஆரணி 10மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதேநேரத்தில், வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் இருந்து வெப்ப காற்று வீசுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தென் மேற்கு அரபிக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாக இருக்கும்.  அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

தமிழகத்தில் தற்போது வடமேற்கு திசையில் இருந்து அனல் காற்று வீசி வருவதால், நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 110 டிகிரி வரை சென்றுள்ளது. மே 31ம் தேதியில் இது மேலும் உயர்ந்து 113 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வடக்கும் மற்றும் வட மேற்கு பகுதியில் நிலவும் வெப்பம் தமிழகத்திலும் பரவியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி வெயில் உயர்ந்துள்ளது. வேலூர், திருச்சி 108 டிகிரி, மதுரை, கரூர் 106 டிகிரி, சேலம் 104 டிகிரி, சென்னை, நாமக்கல் 102 டிகிரி, பாளையங்கோட்டை 101 டிகிரி, தர்மபுரி 100 டிகிரி வெயில் கொளுத்தியது. வட தமிழகத்தில் பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வரை வெயில் நிலவியது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags : Floods ,districts ,district , 10 District, Vail, Anal Wind, Southern Districts, Rain
× RELATED கொரோனா பரவலில் சென்னையை விட...