×

டெல்லி நடைபாதையில் அமர்ந்து தொழிலாளர்களுடன் ராகுல் பேசும் வீடியோ: ஆவண படமாக வெளியிட்டது காங்கிரஸ்

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாலையில் அமர்ந்து பேசும் வீடியோ காட்சிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
 கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். வாகன போக்குவரத்து தடை காரணமாக பல ஆயிரம் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எனினும், ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் புலம் பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினார். டெல்லி சுக்தேவ் மேம்பாலம் அருகே கூட்டமாக இருக்கும் புலம் பெயர் தொழிலாளர்களை கடந்த சனியன்று அவர் சந்தித்தார். ஊரடங்கினால் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர் கேட்டறிந்தார். 16 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவண வீடியோ காட்சிகளில், அவர் கருப்பு நிற பேண்ட், வெள்ளை நிற குர்தா அணிந்து நடைபாதையில் அமர்ந்து தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

 வீடியோ படத்தின் இறுதியில் பேசும் ராகுல் காந்தி, ‘‘எனது புலம்பெயர் தொழிலாள சகோதர, சகோதரிகளே... நீங்கள்தான் இந்த நாட்டின் வலிமை. இந்த நாட்டின் ஒட்டு மொத்த பாரத்தையும் உங்களின் தோள்களில் சுமக்கிறீர்கள். இந்த ஒட்டு மொத்த நாடும் உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த நாட்டின் சக்தியை வலுப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை. மத்திய அரசு உடனடியாக ஒரு குடும்பத்துக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு உடனடியாக உதவிட வேண்டும்,’’ என்று கூறுகிறார்.

Tags : Rahul ,Delhi ,Congress , Delhi, Workers, Rahul, Congress
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...