×

ஊரடங்கால் கைவிடப்பட்ட வெளிநாட்டு நாய் இனங்கள்: செல்லம் காட்டும் தன்னார்வலர்கள்

புனே:  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக கைவிடப்பட்ட வெளிநாட்டு இன நாய்களை மீட்பு குழுவினர் மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவுதலை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தொடரும் ஊரடங்கினால் உரிமையாளர்கள் சிலர் தங்களின் வளர்ப்பு நாய்களை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சிலர் நாய்கள் மூலமாக கொரோனா பரவும் என்ற அச்சத்தில், அவற்றை கைவிட்டுள்ளனர். இது மட்டுமின்றி தொடர் ஊரடங்கு அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றவர்களாலும், ஏராளமான செல்லப் பிராணிகள் அனாதைகளாகி உள்ளன. இவை உணவின்றி தெருக்களில் சுற்றி வருகின்றன.

இந்நிலையில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட இந்த செல்ல பிராணிகளை, மீட்கும் பணியில் விலங்கு தத்தெடுப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வளர்த்தவர்களால் கைவிடப்பட்டு சுற்றி திரியும் நாய்களை, குறிப்பாக வெளிநாட்டு இன நாய்களை மீட்டு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும், உணவின்றி தெருக்களில் சுற்றிதிரியும் நாய்களுக்கும் இந்த குழு உணவளிக்கிறது.

இந்த மீட்பு குழுவை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், “ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 40 செல்லப் பிராணிகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப் உள்ளிட்ட வகைகளை சேர்ந்தவைகள் மீட்கப்பட்டுள்ளன. இவை புனேவுக்கு வெளியே அமைந்துள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,” என்றார்.



Tags : pet volunteers ,volunteers , Curfew, foreign dog breeds, corona, curfew
× RELATED பிரதமர் மோடி பிரசாரத்தில்...