×

2 லட்சம் முதியவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு: நான்கு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறைகிறது: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள நான்கு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இரண்டு லட்சம் முதியவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட களப்பணியாளர்களின் பணியினை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு இலவச முகக்கவசங்களை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்  மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் வழங்கினர்.

பின்னர்  சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது : இதுவரை 3,791 நபர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இறப்பு சதவிதம் 0.7 சதவீதம் என்னும் அளவில் தொடர்ந்து வருகிறது. சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் மண்டலங்களில்  நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கு புதிதாக ஏற்படும் தொற்றுகள் மூலம் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   மொத்தமுள்ள 200 வார்டுகளில் 33 வார்டுகளில் பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: குடிசை பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் 8லட்சத்துக்கும் மேற்பட்ட வயதானவர்கள் உள்ளனர். அதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உடல் உபாதைகளுடன் உள்ளனர். அவர்களை நான்கு நாட்களுக்கு ஒருமுறை தொடர்பு கொண்டு தேவையான அறிவுரைகள் வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்பதை 24 -48  மணி நேரத்தில் கண்டுபிடித்து விடுகிறோம்.

சென்னை மாநகரில் அதிக அளவு சோதனை செய்து வருகிறோம். பாசிடிவ் வந்தவர்களுக்கு எங்கிருந்து வந்த்து என்பது தெளிவாக கண்டறிந்து வருகிறோம். இந்த நிலை  இருந்தால் அது சமூக தொற்று இல்லை என உலக சுகாதார நிறுவனம்  சொல்லி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்ததற்கான  ஆதாரங்கள் சரியாக உள்ளதால் சமூக தொற்று இல்லை.இவ்வாறு கூறினர்.

Tags : seniors ,zones , Elderly, Four Zones, Corona, Officers
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...