×

ஆன்லைன் மூலம் படிக்க 6 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்துவதற்கு ஏதுவாக மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 6 ஆயிரம் ஸ்மார்ட் போன் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.  இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவருக்கு மட்டும் வரும் ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும்  என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்கள் மற்றும் பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு பாடம் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இதன்படி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 6 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கிரேஸ் பச்சாவ் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூன் 1ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஜூம் செயலி மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து யூடியூப் நேரலை மூலமும் பாடங்களை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.



Tags : Chennai Corporation , Online, Students, Smart Phone, Madras Corporation
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...