×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு: கொரோனா நோயாளி சிகிச்சையில் இருந்து தப்பி ஓட்டம்

* தொடரும் சம்பவங்களால் மக்களிடையே நோய் பரவும் அபாயம்

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். பாதுகாப்பு குறைபாடால் இதுபோன்ற சம்பவங்கள் தொடந்து நடந்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நோய் தொற்றின் வேகம் அதிதீவிரமடைந்துள்ளது. நேற்று காலை சென்னை முழுவதும் 9,364 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடையே கொரோனா வேகமாக பரவி வருவதால் பாதுகாப்பு பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் மேட்டுத்தெருவை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 20ம் தேதி கொரோனா பாதித்து ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள டவர் 3வது கட்டிடத்தின் 7வது தளத்தில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் உணவு வழங்க மருத்துவமனை ஊழியர்கள் அவரது அறைக்கு சென்றனர். அங்கு நோயாளி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே சம்பவம் குறித்து  மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.   மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாயமான நோயாளியின் அயனாவரம் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
  கடந்த ஒரு மாதத்தில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து மாயமான 4வது நோயாளி இவர். கொரோனா வார்டுகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடே இதற்கு காரணம் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளர். ஏற்கனவே சென்னை முழுவதும் நோய் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் மாயமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rajiv Gandhi Government Hospital, Corona, Patient Treatment, Escape
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...