×

பாரபட்ச அபராதத்தை ரத்துசெய்யக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் விதித்த பாரபட்ச அபராதத்தொகையை ரத்து செய்யக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அன்றைய தினம் பணியாளர்கள் விற்பனை தொகையை வங்கிகளில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், வங்கிகள் திறக்கப்பட்டதும் விற்பனை பணத்தை வங்கிகளில் செலுத்தினர். இந்நிலையில், விற்பனை பணத்தை தாமதமாக கட்டியதால் 50 சதவீத அபராத தொகையை ஊழியர்கள் கட்ட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில், அம்பத்தூர் டாஸ்மாக் கிடங்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் கோதண்டம் கூறியதாவது: ஏற்கனவே இருப்பு தொகைக்கான வித்தியாச தொகையை மாவட்ட மேலாளர்களின் அறிவுறுத்தலின்படி வங்கியில் ஊழியர்கள் செலுத்திவிட்டனர். தற்போது மீண்டும் அந்த வித்தியாச தொகைக்கு 50 சதவீத அபராத தொகையும், வட்டியுடன் ஜிஎஸ்டி சேர்த்து கட்ட வலியுறுத்தப்படுகிறார்கள். இது ஊழியர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அபராத தொகை கட்டுவதை ரத்துச்செய்ய டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருட்டுப்போன மதுபான தொகையை பணியாளர்களை கட்ட நிர்பந்திக்காமல் காப்பீடு மூலம் பெற வழிவகை செய்ய வேண்டும். பணத்தை நேரடியாக வங்கிகள் மூலம் வசூல் செய்ய வேண்டும். பணியாளர்களை கட்ட சொல்வதை கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.    


Tags : Task staff , Black badge, task force staff, demonstration
× RELATED வேகமெடுக்கும் கொரோனா அதிகாரிகள் மெத்தனத்தால் டாஸ்மாக் ஊழியர்கள் அச்சம்