×

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 3 மூதாட்டி பலி

தண்டையார்பேட்டை: வடசென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று உள்ளவர்கள் ஸ்டான்லி மருத்துவனை, ராஜிவ்காந்தி மருத்துவமனை, பன்னோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இங்கு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இதுவரை சென்னையில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், ராயபுரம் மண்டலத்தில் 15 பேரும்,  திருவிக நகர் மண்டலத்தில் 11 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று மேலும் 3  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை சூளையை  சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு கடந்த 14ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரம்பூர்: திருவிக நகர் மண்டலம்  கன்னியாசெட்டி கார்டன் பகுதியை சேர்ந்த 65 வயது பெண், கடந்த 15ம் தேதி உடல் நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, இவருக்கு கடந்த 17ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை 10மணிக்கு உயிரிழந்தார்.
 மற்றொரு சம்பவம்: பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்த 69 வயது மூதாட்டிக்கு கடந்த 20ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 7 பேருக்கு தொற்று: குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ராம் நகரை சேர்ந்த 48 வயது சிவில் இன்ஜினியர், அவரது 44 வயது மனைவி, 18 வயது மகள் ஆகிய மூன்று பேர், கவுரிவாக்கத்தை சேர்ந்த (55) வயது ஆண், தாம்பரம், ரங்கநாதபுரத்தில் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவரின் மனைவி, அவரது மகள், தாம்பரம் சானடோரியத்தை சேர்ந்த 18 வயது வாலிபர், மேற்கு தாம்பரம் அம்பாள் நகரை சேர்ந்த 69 பெண், முடிச்சூரை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது.

ஒரே நாளில் 177 பேர் பாதிப்பு
ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட கொத்தவால்சாவடி வரதமுத்தையா தெருவில் 2 பேர், நாகமணி கார்டன் பகுதியில் ஒருவர், மின்ட் தெருவில் 3 பேர், பெருமாள் கோயில் தெருவில் 2 பேர், பிராட்வே, முத்தியால்பேட்டை, காக்கா தோப்பு ஆகிய பகுதிகளில் 15 பேர், மண்ணடி பகுதியில் 5 பேர் என 119 பேருக்கு நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நேதாஜி நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை மற்றும் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் 58 பேருக்கு நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.  இவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் அரசு பன்னோக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Coroner ,government ,hospitals , Government and Private Hospitals, Corona, Muthatti Kills
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...