×

மணலி கொசப்பூர் சாலையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்: அச்சத்தில் பொதுமக்கள்

திருவொற்றியூர், : மணலி கொசப்பூர் சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 17வது வார்டுக்குட்பட்ட கொசப்பூர் சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  அமைந்துள்ள குடியிருப்புகள், தனியார்  நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யும் வகையில், மின்வாரியம் சார்பில் கொசப்பூர் சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மின்தடை மற்றும் மின் வினியோகத்தில் ஏற்படும் குறைபாடு மற்றும் பராமரிப்பு பணிகளை  சோத்துப்பாக்கம் பகுதி மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்நிலையில் கொசப்பூர்  சாலையில் அமைந்துள்ள  ஒரு மின்கம்பம் சில தினங்களுக்கு முன்பு சாய்ந்தது. இதனை இதுவரை சீரமைக்காததால் கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மின்வாரிய உதவி பொறியாளருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆபத்தான முறையில் உள்ள இந்த  மின் கம்பம் திடீரென விழுந்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் இதன் அருகே உள்ள நிலத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் மின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Manali Kosapur , Manali, Kosapur Road, Electricity, Public
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி