×

மீன்கள் மீது பிளீச்சிங் பவுடர் கொட்டிய அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை: எர்ணாவூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: எர்ணாவூர் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களில் பிளீச்சிங் பவுடர் கொட்டிய அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணூர்  காசி விசாலாட்சி குப்பம், நேதாஜி நகர்,  பாரதியார் நகர்  போன்ற பல மீனவ கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்
பிடித்து, எர்ணாவூர், ராமகிருஷ்ணா நகர்  கடற்கரையோரம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராமகிருஷ்ணா கடற்கரையில், மீனவர்கள் வழக்கம்போல் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மீன் கடை அருகே அதிகமானவர்கள் நின்றதாக கூறி, விற்பனைக்கு வைத்திருந்த பட்டம்மா (65) என்பவர் வைத்திருந்த மீன்கள் மீது  பிளீச்சிங்  பவுடரை கொட்டியுள்ளனர். அப்போது, மீன்களில் மட்டுமின்றி, விற்பனை செய்து கொண்டிருந்த மீனவ மூதாட்டிகள் மீதும் பிளீச்சிங் பவுடர் சிதறியது. இதுபற்றி அறிந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர், சம்பவ இடத்துக்கு வந்து, அத்துமீறி நடந்துகொண்டதாக அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
செய்தனர்.

தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி முருக பாலாஜி, நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், அந்த பகுதியில் சமூக இடைவெளியுடன் விற்பனை செய்ய பாதுகாப்பான இடங்களை அமைத்து தருவதாக திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் உறுதியளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Fishes, Bleaching Powder, Fishermen Siege, Ernaur
× RELATED மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும்,...