×

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கைதான 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் கைதான 12 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நியூ ஹோப் மருத்துவமனையை நடத்தி வந்தவர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ். இவர், சமீபத்தில் அந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை பரிசோதித்ததில் கொரோனாவால் பாதித்துள்ளார். இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை முழு பாதுகாப்புடன் அடக்க செய்ய குடும்பத்தினர் மற்றும் டாக்டர்கள் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேலங்காடு சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அங்கும் பொதுமக்கள் திரண்டு கற்களையும், கம்புகளையும் தூக்கி வீசினர் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறை சம்பவத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அண்ணா நகர் போலீசாரும், டி.பி.சத்திரம் போலீசாரும், கலவரத்தில் ஈடுபட்ட 22 பேருக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் அண்ணா நகர் காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்ட சோமசுந்தரம், சுரேஷ், விக்னேஷ் குமார், குமார் (எ) பிச்சை, விஜய், மணி ஆகியோரும், இதேபோல், டி.பி.சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட குமரேசன், மோகன், ஜெயமணி, ஜெயபிரபா, ஜெனிதா, தமிழ்வேந்தன் ஆகியோர் என, 12 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த மனு நீதிபதிவை நிர்மல்குமார் விசாரணை செய்தார்.

மனுதாரர் தரப்பு வாதம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் அடக்கம் செய்யப் போவதாக வந்த தகவலை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பின் அதிகாரிகள் உடலை எடுத்துச் சென்ற பின் கலைந்து சென்று விட்டதாகவும், ஆனால் தங்களை காவல் துறையினத் கைது செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

அரசு தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், கொரோனா பாதித்து பலியானவரின் உடலில் இருந்து வைரஸ் பரவும் என்ற வதந்தி காரணமாக மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டி, 12 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் நடைமுறைகள், வழிமுறைகள் குறித்து அரசு அதிகாரிகள், முன்கூட்டியே அப்பகுதி மக்களுக்கு தெரிவித்திருந்தால், இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மனுதாரர்கள் அனைவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான பிணையை செலுத்த வேண்டும் எனவும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும், தலைமறைவாகக் கூடாது எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது எனவும் நீதிபதி நிபந்தனைகளை விதித்துள்ளார்.


Tags : persons ,corruption Coroner ,death ,arrests , Corona, physician, conditional bail, iCord
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...