×

வெளியூர் வியாபாரிகள் வராததால் விலையில் ‘காரம்’ குறைந்த மிளகாய் : வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

வருசநாடு: கொரோனா ஊரடங்கால் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு, வெளியூர் வியாபாரிகள் வருகையில்லாததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காமல், அவைகளை வற்றலாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சம்பா, மோட்டா, புல்லட் என மூன்று வகையாக மிளகாய்களை பயிரிடுகின்றனர். தற்போது மிளகாய்களை அறுவடை செய்யும் நேரத்தில், கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தின்றி வெளியூர் வியாபாரிகள் வராததால், மிளகாய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்குக்கு முன் கிலோ ரூ.25 முதல் 30 வரை போன மிளகாய் தற்போது கிலோ, ரூ.10லிருந்து ரூ.15 வரை விலை போவதாக கூறப்படுகிறது.

இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மிளகாய்களை சந்தைக்கு அனுப்பாமல், தங்களுடைய தோட்டங்களில் உலர்த்தி பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘மிளகாய் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். மிளகாய்களை பதப்படுத்தவும், பாதுகாக்கவும் உரிய வழிமுறைகளை தெரிவித்துள்ளோம். இதை முறையாக விவசாயிகள் பின்பற்றுவதில்லை. இதனால், அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது’ என்றனர்.

Tags : process Farmers , Farmers ,struggling , drying process
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...