7 நாட்கள் அரசு முகாம்களில் தனிமை: உள்நாட்டு விமானங்களில் கர்நாடகா வரும் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில பயணிகளுக்கு கட்டுப்பாடு...மாநில டிஜிபி அறிவிப்பு

பெங்களூரு: உள்நாட்டு விமானங்களில் கர்நாடகா வருபவர்களுக்கு அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்ததுள்ளது. கடந்த 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றார்.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பேருந்துகள் இயங்கலாம் என்று உத்தரவிட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் மாநிலத்திற்குள் அனைத்து ரயில்கள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் அனைத்து விதமான கடைகளை திறக்கவும் முதல்வர் அனுமதி அளித்துள்ளார். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை தளர்வு கிடையாது என்று ஆணையிட்ட முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு, கேரளா,மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலத்தவர்கள் கர்நாடகாவிற்கு வர தடை விதித்துள்ளார். கர்நாடகா மாநிலத்திற்கு செல்வதற்கான அரசு அனுமதிச் சீட்டு இருந்தாலும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மே 31ம் தேதி வரை இந்த தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான, விமான முன்பதிவும் கடந்த 21-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில், உள்நாட்டு விமானங்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடக வரும் பயணிகள் 7 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பிறகு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக டிஜிபி அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Related Stories: