×

கூட்டாட்சி முறையை மறந்து, ஜனநாயகத்தை அறவே கைவிட்டது பாஜ அரசுக்கு 22 கட்சிகள் கண்டனம்: ரூ.20 லட்சம் கோடி நிதிச்சலுகை ஒரு கொடூர ஜோக்’ என சோனியா ஆவேசம்

புதுடெல்லி: ‘கூட்டாட்சி முறையை மறந்து, ஜனநாயகத்தை அறவே கைவிட்டு விட்டது’, என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக உள்ளிட்ட 22 கட்சிகள், மத்திய பாஜ அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதில் பேசிய சோனியா, ‘மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிதிச்சலுகை என்பது ஒரு கொடூரமான ஜோக்,’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டு உள்ள  ஊரடங்கு, வெளிமாநில தொழிலாளர்கள் பயணச் சோகம், பொருளாதார பாதிப்பு, லட்சக்கணக்கான வேலையிழப்பு என நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இவற்றை பற்றி விவாதிப்பதற்காக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 22 கட்சிகளின் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், கூட்டாட்சி முறையை மறந்து,  ஜனநாயகத்தை அறவே கை விட்டு விட்டதாக மத்திய பாஜ அரசுக்கு இக்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: எந்த காரணத்திற்காக ஊரடங்கை அமல்படுத்துகிறோம் என்பது தெரியாமலேயே, மத்திய அரசு அதை செயல்படுத்தி உள்ளது. தற்போது, அதில் இருந்து வெளியேறுவதற்கான திட்டமும் இல்லாமல் திணறி வருகிறது. மத்திய அரசு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 13 கோடி குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்காமல் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளது.பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டமும், அதற்கு அடுத்த 5 நாட்கள் அதன் தொகுப்பு குறித்து நிதியமைச்சர் அறிவித்த விவரங்களும் நாட்டில் நடந்த மிக கொடூரமான ஜோக்காகும். நாட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க நாடாளுமன்றமோ அல்லது நாடாளுமன்ற நிலைக் குழுவோ அழைப்பு விடுப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

ஜனநாயக முறையில் நடந்து கொள்வதாக காட்டிக் கொள்வதைக் கூட ம‍த்திய அரசு கைவிட்டு விட்டது. பிரதமர் அலுவலகமே அதிகார குவியல்களின் மையமாக விளங்குகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமலும், எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமலும் தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்வதும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதுமாக அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. இதனை எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன. நாட்டின் 2020-21ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என்றும், இதனால் பேரழிவு உண்டாகும் என்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று அரசு கொஞ்சமும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அரசுக்கு ஏழைகள் மீது எந்த விதமான கருணையும் இரக்கமும் இல்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

நாட்டின் அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த அம்சமான கூட்டாட்சி முறையை மத்திய அரசு அடியோடு மறந்து விட்டது. ஜனநாயகத்தை அறவே கைவிட்டு விட்டது. ஆக்கப்பூர்வமாக விமர்சிப்பதும், கருத்துகளை தெரிவிப்பதும், மக்களின் குரலாக ஒலிப்பதும் எதிர்க்கட்சிகளின் கடமை. அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு இலவச உணவு, அவர்களின் வங்கி கணக்கில் பணம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் செவிடர் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 7 காலாண்டுகளாக வீழ்ச்சி அடைந்த போதே, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது. இருப்பினும், அரசு தனது தவறான கொள்கைகளினாலும் திறமையற்ற நிர்வாகத்தினாலும் ஆட்சி நடத்தி வருகிறது. தொடக்கத்தில் கொரோனாவுக்கு எதிரானப் போர் 21 நாட்களில் முடியும் என்று பிரதமர் கூறியது தவறாகி விட்டது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனா இந்தியாவை விட்டு போகாது. தொடர் ஊரடங்கினால் வருவாய் இழப்பு மட்டுமே ஏற்பட்டது. பரிசோதனை மற்றும் பரிசோதனை கருவிகள் இறக்குமதியிலும் அரசு மிகவும் மோசமாக செயல்பட்டது. கொரோனா வைரசால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதாரம் மிகவும் நலிந்து உள்ளது. பெரிய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கும்படி பொருளாதார நிபுணர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

11 அம்ச கோரிக்கை
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கம், ஒடிசா மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றன. ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இம்மாநிலங்களை 2வது அடியாக அம்பன் புயல் தாக்கியுள்ளது. பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இதனை உடனடியாக மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர், ஊரடங்கால் பாதித்துள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் புதிய பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்ற 11 அம்ச கோரிக்கைகளையும் மத்திய அரக்கு இக்கட்சிகள் முன்வைத்தன.



Tags : government ,Sonia ,BJP ,parties , Federal system, BJP government, 22 parties, Sonia, Modi
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு