×

பத்திரிகை துறையை பாதுகாக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உறுதி

சென்னை: பத்திரிகைத் துறைக்கு தமிழக பாஜ என்றென்றும் துணை நிற்கும். கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று பாஜ தலைவர் எல்.முருகன் உறுதி அளித்தார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகனை சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தி இந்து குழும இயக்குனர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்எம்ஆர்.ரமேஷ், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது, தற்ேபாது பத்திரிகை துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக பாஜ தலைவரிடம் விரிவாக விவரித்து, அவர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை கொடுத்தனர். மேலும், பத்திரிகை துறையில் தற்போது, ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விளக்கினர். அச்சு காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும், நாளிதழ்களுக்கு அரசுகளிடம் இருந்து வர வேண்டிய விளம்பர கட்டண பாக்கிகளை உடனுக்குடன் வழங்க உத்தரவிட வேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அப்போது, எல். முருகன் ‘‘உங்கள் கோரிக்கைகள் முழுக்க, முழுக்க நியாயமானவை. பத்திரிகைத் துறைக்கு தமிழக பாஜ என்றென்றும் துணை நிற்கும். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்’’ என்று உறுதி அளித்தார்.


Tags : L. Murugan ,Modi ,BJP ,Tamil Nadu , The Press Department, Prime Minister Modi, Letter, Tamil Nadu BJP President L. Murugan
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...