×

திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு

திருவள்ளூர்: தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மே 8ம் தேதி மாலை சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 16ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில் 16ம் தேதி காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கா க, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது.

டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர்.  அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் 86 டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் உள்ளன. இதில் திருவள்ளூர் நகரில் உள்ள 6 டாஸ்மாக் மதுபான கடைகள் தவிர, மற்ற 80 அரசு டாஸ்மாக் கடைகளும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குடை, மாஸ்க் கட்டாயம்
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் கூறியதாவது, அரசு மதுபான கடைகள் அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன் வீதம் வழங்கப்படும். அதுவும், உள்ளூர் நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வாங்க டோக்கன் வழங்கப்படும். சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட மாட்டாது. கடைக்கு வரும் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் மதுபானம் வாங்க வரும் நபர்கள், குடையுடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி செல்லவும் என்றார்.

Tags : stores ,TASMAC ,district ,Thiruvallur , Tiruvallur District, Task Shop Opening, Corona, Curfew
× RELATED 30 சதவீதம் மட்டுமே சேல்ஸ்; டாஸ்மாக்...