×

தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்தில் ஓய்வுபெற்றவர்கள் நியமனத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு: பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் தகவல்

சென்னை: தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்வதை தவிர்த்தால் அரசின் செலவினங்களை குறைக்கலாம் என்பதால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த 2018 டிசம்பர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கழகம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கு ஒருவர் வீதம் 4 தலைமை பொறியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.  

இதை தவிர்த்து 2 கண்காணிப்பு பொறியாளர், 2 செயற்பொறியாளர், 1 கம்பெனி செயலாளர், 1 நிதி ஆலோசகர், 1 ஏஜிஎம் (நிதி), 1 ஏஜிஎம் (நிர்வாகம்), 3 உதவியாளர் உட்பட 17 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.  நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் கழகத்தில் தலைவர் உட்பட அனைவரும் ஓய்வு பெற்றவர்களாக உள்ளனர். அவர்களை இந்த கழகத்தில் நியமனம் செய்வதால் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம் தர வேண்டியிருப்பதால் அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது பொதுப்பணித்துறையில் 14 தலைமை பொறியாளர் பணியிடங்கள் உள்ளன.

இதில், நீர்வளப்பிரிவில் மட்டும் மாநில நீர்வள மேலாண்மை முகமை, கட்டுமான ஆதாரம் மற்றும் வடிவமைப்பு, திட்ட வடிவமைப்பு, அணைகள், பாதுகாப்பு இயக்ககம், நிலத்தடி நீர் ஆதார விவர குறிப்பு மையம், நீர் ஆய்வு நிறுவனம், பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன தலைமை பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. இதை தவிர்த்து, சென்னை, மதுரை, கோவை, திருச்சி 4 மண்டல தலைமை பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில், மாநில நீர்வள மேலாண்மை முகமை, கட்டுமானம் ஆதாரம் மற்றும் வடிவமைப்பு, அணைகள் பாதுகாப்பு இயக்ககம், நீர் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தலைமை பொறியாளர் பணியிடங்களை குறைக்கலாம்.

அந்த பணியிடங்களை குறைத்து விட்டு அதற்கு பதிலாக கழகத்துக்கு ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்துவதற்கு பதிலாக, அந்த பணியில் உள்ள தலைமை பொறியாளர்களை நியமிக்கலாம். அதேபோன்று கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் பதவியில் பணியில் உள்ளவர்களை நியமனம் செய்யலாம். அவ்வாறு செய்தால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதை குறைக்கலாம் என்று பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.


Tags : Retirement ,Tamil Nadu Water Resources Conservation Corporation , Tamil Nadu Water Resources, Conservation Corporation, Government of Tamil Nadu, Public Works Department
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்