×

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30க்குள் நடத்த வேண்டும்: சிறப்பு அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறப்பு அதிகாரிக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்ததால் , பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளரான என்.சேகர் தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. இதையடுத்து, தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், தயாரிப்பாளர்  சங்க தேர்தலை நடத்த சிறப்பு அதிகாரியாக ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரனை நியமித்தும் உத்தரவிட்டது. சிறப்பு அதிகாரி ஜூன் 30ம் தேதிக்குள்  தேர்தலை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கு  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள்  நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சிறப்பு அதிகாரி அக்டோபர் 30 ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



Tags : election ,Filmmakers' Association ,officer ,Special officer ,Icort , Film Producers' Council Election, Special Officer, HC
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...