×

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முகக்கவசம் அணிவதால் தற்காத்துக்கொள்ள முடியுமா?

* கைக்குட்டையால் 20% மட்டுமே பாதுகாப்பு
* அரசு டாக்டர் விளக்கம்

சென்னை: கைக்குட்டை அணிவதால் 20 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு என்றும், முகக்கவசம் அணிவதால் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியுமா என்பது தொடர்பாக அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முகக்கவசம் அணிவது, கையுறை அணிவது, அடிக்கடி சோப் போட்டு கைகழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்களில் பலர் இதை முழுமையாக கடைபிடிப்பதில்லை. இதனால், கொரோனா பரவுவதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர் முகக்கவசம் அணிவதற்கு பதிலாக கைக்குட்டைகளை முகத்தில் அணிந்து செல்கின்றனர். அவர்கள் கைக்குட்டைகளை அணிவதால் கொரோனா தொற்று பரவாது என நினைக்கின்றனர். ஆனால்,  கைக்குட்டை அணிந்து சென்றதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று பாதிப்பில் இருந்து மீண்ட ஆவடியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மாஸ்க் போட வேண்டும், கையை சுத்தமாக கழுவினால் கொரோனா பரவாது.

நான் முகக்கவசத்திற்கு பதிலாக கைக்குட்டை கட்டி விட்டேன். கைக்குட்டை அணிந்து கோயம்பேடு மார்க்கெட் சென்று விட்டு திரும்பி வந்தேன். கைக்குட்டை அணிந்த 2 நாட்களில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. எனவே, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’’ என்றார். இதுகுறித்து, அரசு டாக்டர் ராமலிங்கம் கூறியதாவது: கைக்குட்டை அணிந்து சென்றால் காற்று இடைவெளியை அடைக்காது. கைக்குட்டையில் இடுக்குகள் அந்த அளவுக்கு திறன் இருக்காது. 20 சதவீதம்தான் உங்களை பாதுகாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் சர்ஜிக்கல் முகக்கவசம் 80 முதல் 90 சதவீதம் பாதுகாப்பு உண்டு.

இதே என் 95 முகக்கவசம் மேலும் 85 முதல் 95 சதவீதம் கூடுதலாக இருக்கும். எதையுமே 100 சதவீதம் பாதுகாக்கும் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் கைக்குட்டை, துணிகள் அணிவதால் 20 முதல் 25 சதவீதம்தான் பாதுகாக்கும். அதுவே நாம் சும்மா இருக்கும் போது வேண்டுமென்றால் கட்டிக்கொள்ளலாம். ஆனால், அது நமக்கு பாதுகாப்பு இருக்காது. நாம் தனியாக செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. அதேநேரத்தில், கூட்டமாக இருக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது, இடைவெளி ஒரு மீட்டர் குறைவாக நிற்க வேண்டியதிருக்கும். அது மாதிரியான நேரத்தில் முகக்கவசம் கட்டாயம்.

அந்த இடத்தில் 20 சதவீதம்தான் பாதுகாக்கும். காற்றின் மூலம் எச்சில் பரவுவதை கட்டுப்படுத்ததான் முகக்கவசம் அணிகிறோம். நாம் முகக்கவசம் அணிந்து விட்டால் பாதுகாப்பு என நினைக்கிறோம். அந்த முகக்கவசத்தை கையால் தொடக் கூடாது. ஓரமாக காதில் மாட்டும் நாடாவை வைத்துதான் நாம் அட்ஜெஸ்ட் பண்ண வேண்டும். மாஸ்க் துணியை நேரடியாக கையால் தொடக்கூடாது. மொத்த வைரஸ் அங்கேதான் இருக்கும். நாம் கையை அங்கே வைத்தால் நம் கையில் வைரஸ் ஒட்டிக்கொள்ளும். அது நேரடியாக நமது முகக்கவசம் மூலம் பாதிப்பு ஏற்படும். எனவே, முகக்கவச துணியை தவறி தொட்டால் கைக் கழுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Corona , Corona, mask, government doctor, curfew
× RELATED பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி