×

கொரோனாவை கட்டுப்படுத்த பகுதி வாரியாக மருத்துவர்களை நியமிக்க முடிவு

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக மருத்துவர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சென்னையில் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதன்படி சென்னையில் உள்ள  200 வார்டுகளில் 167 வார்டுகளில் 10க்கும் குறைவான நபர்களுக்கே வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீதமுள்ள 33 வார்டுகளில் 50 சதவீதம் பாதிப்பு  உள்ளது.

குறிப்பாக கோயம்பேடு, புளியந்தோப்பு, நெற்குன்றம், ஜார்ஜ் டவுன் பெரியமேடு, கிருஷ்ணாம்பேட்டை, ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கிடையில் சென்னையில் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி மற்றும் மண்டல வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி பகுதி வாரியாக பிரித்து கட்டுப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பகுதிவாரியாக மருத்துவர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் கொரோனாவின் பரவலைத் தடுக்கும் பணியில் பல்வேறு சவால்களை மாநகராட்சி எதிர்கொண்டு வருகிறது.சவாலான நேரங்களை எதிர்கொள்கிறோம்.

இன்னிலையில் இதை எதிர்கொள்ள பகுதிவாரியாக மருத்துவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி எந்த உடல்ரீதியான பாதிப்பு இல்லாத 50 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். மேலும் சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து இந்த பணிகளை மேற்கொள்வார்கள். சென்னையில் மொத்தம் 46 பகுதிகள் உள்ளன இதன்படி ஒரு பகுதிக்கு ஒரு மருத்துவர் வீதம் மொத்தம் 46 மருத்துவர்கள் நியமிக்க படுவார்கள்.

இவர்கள் யாரும் புதிய மருத்துவர்கள் இல்லை. ஏற்கனவே சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமூக நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மருத்துவர்கள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : doctors , Corona, Doctors, Curfew, Corona Virus
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை