×

20 லட்சம் கோடி மட்டுமல்ல பொருளாதார சலுகைகள் இன்னும் நிறைய இருக்கு!: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ‘‘பொருளாதார சலுகை அறிவிப்புகள் இதோட நின்னு போகாது, இது தற்காலிக நிறுத்தம்தான். இன்னும் நிறைய அறிவிப்புகள் வரத்தான் போகிறது’’ என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் கூறி உள்ளார். இது குறித்து அமைச்சர் அனுராக் தாகூர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்தே, ஊரடங்கால் ஏற்பட்ட மக்களின் கஷ்டங்களை தீர்க்கவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் தொழில் நிறுவனங்களின் செலவை குறைக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டன. இரண்டாவதாக ரூ.1.70 லட்சம் கோடியில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. மூன்றாவதாக ரூ.20.97 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இதோடு நின்று விடவில்லை. இது தற்காலிக நிறுத்தம் தான்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் இன்னும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும். மக்களின், தொழில் துறையின் தேவையை மோடி அரசு உணர்ந்துள்ளது. சுற்றுலா, விமான போக்குவரத்து, ஓட்டல் ஆகிய துறைகள் மிக முக்கியமானவை. இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கை வகிப்பதோடு, பல வேலைவாய்ப்பையும் உருவாக்குகின்றன. 2020ம் ஆண்டு பொருளாதார சீர்த்திருத்தங்களின் ஆண்டாக இருக்கும். சிறு குறு நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றியது, நிலக்கரி சுரங்கம், கனிம துறைகளை தாராளமயமாக்கியது, ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்தது போன்றவை மிக தைரியமான முடிவுகளாகும்.

ஏழைகளுக்கு நேரடியாக பலனிக்கும் பல திட்டங்களையும் அரசு செய்துள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு பிணையில்லா கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இத்துறைக்கு ஊக்கத்தை தருவதுடன், வேலை பாதுகாப்பு, பணி நீக்கங்களை தவிர்க்க உதவும். மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரித்து பொருளாதாரத்தில் நீண்டகாலத்திற்கு தேவையை தக்க வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Economy, Union Minister, Corona, Curfew
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்