×

சிறப்பு ரயிலில் செல்லும் தொழிலாளர்கள் உணவுப் பொட்டலங்களை அள்ளிச் செல்லும் அவலம்: வைரலாகும் வீடியோ

சமஸ்திபூர்:  கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். வேலையில்லாததால், உண்ண உணவின்றி தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். பல லட்சம் தொழிலாளர்கள் நடந்தே செல்கின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்களை  இயக்கி வருகின்றன. ரயிலில் பல மணி நேரம் பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்யாததால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மும்பையில் இருந்து பீகார் மாநிலத்தின் தனாப்பூருக்கு  சிறப்பு ஷராமிக் ரயிலில் சென்றவர்கள், ஜபால்பூர் ரயில் நிலையத்தில் இருந்த உணவு பொருட்கள் வழங்கும் இயந்திரத்தை சேதப்படுத்தி விட்டு உணவு பொருட்களை அள்ளிச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.  இதேபோல், டெல்லியில் இருந்து சென்ற சிறப்பு ரயில் பாட்னா செல்லும் வழியில் பீகாரின் கதிஹர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்தவரிடம் இருந்து கும்பலாக வந்த நபர்கள் உணவு பொட்டலங்களை பறித்து சென்றனர். இது குறித்த 20 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக பீகாரின் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் உணவு பொட்டலங்களை குவியலாக போட்டுச் செல்வதும், மக்கள் அவற்றை முண்டியடித்து வந்து அள்ளிச் செல்லும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.  உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை கும்பலாக மக்கள் திரண்டு எடுத்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்  முகக் கவசம் அணிந்திருந்த போதிலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் திரண்டுள்ளனர். இந்த காட்சிகள் வெளிமாநில தொழிலாளர்களின் பரிதாபங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.


Tags : train workers , Special train, workers, food parcels, corona, curfew
× RELATED மாநில காங். சார்பில் கட்டண தொகை...