×

மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன் மன்னிப்பவன் அதை விட பெரியவன்: கசோகி கொலையாளிகளுக்கு மகன்கள் மன்னிப்பு

துபாய்: பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொன்ற கொலையாளிகளுக்கு, அவருடைய மகன்கள் மன்னிப்பு வழங்கியுள்ளனர்.  சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி, அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார். சவுதி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார். கடந்த 2018ம் ஆண்டு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு சென்ற அவர் பின்னர் மாயமானார். பின்னர், சவுதி அரசை விமர்சித்ததற்காக அந்த தூதரகத்திலேயே அவர் கொடூரமாக கொல்லப்பட்டது உறுதியானது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. இவர்களில் 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து, சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜமால் கசோகியின் மகன்களில் ஒருவரான சாலா கசோகி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நாங்கள் ஜமால் கசோகியின் மகன்கள். எங்கள் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விடுகிறோம்,”என்று கூறியுள்ளார்.  இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சவுதி நாட்டு பத்திரிக்கைகள், ‘கொலை செய்யப்பட்ட கசோகியின் மகன்கள் மன்னிப்பு வழங்கியதின் மூலம், கொலையாளிகள் மரண தண்டனையில் இருந்து வேண்டுமானால் விடுபடலாம்.

ஆனால், அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று அர்த்தமல்ல,’ என்று தெரிவித்துள்ளன. கசோகி கொலையில் தண்டனை பெற்றுள்ள அனைவரும் சவுதி அரசில் உளவுத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை பார்த்து வந்தவர்கள். இந்த மன்னிப்பின் மூலம் அவர்களின் உயிரும், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலமும் காப்பாற்றப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் சிலவற்றில் குற்றம் செய்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு தீங்கிழைத்த அவர்களை மன்னித்து விட்டால், தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவது சட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : killers ,sons ,plane crash ,Pakistani ,passengers , pologist, man, gentleman, kazogi, killers,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...