×

மதுக்கடை திறந்ததால் மன நிம்மதி தொலைந்தது; குடிக்கும் மகனை ஜெயில்ல போடுங்க இல்லாட்டி என்னைய சாகவிடுங்க... கலெக்டர் அலுவலகத்தில் தாய் கதறல்

தூத்துக்குடி: மது குடித்து விட்டு தகராறு செய்யும் மகனால் தற்கொலை ெசய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், மகனை ஜெயிலில் அடைக்கச் சொல்லியும் கலெக்டர் கார் முன் அமர்ந்து தாய் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி, அத்திமரப்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மனைவி தாழபுஷ்பம். முனியசாமி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். மகன் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்த தாழபுஷ்பம், கலெக்டர் கார் முன்பு அமர்ந்து, மது போதையால் தனது மகன் குடித்து விட்டு ரகளை செய்வதாக கண்ணீர் விட்டு கதறினார். தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் தனது நிலை குறித்து மனு அளித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் ஆசையாக வளர்த்த எனது மகன் சின்னத்துரை (35). மது பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து நிற்கிறான். கடந்த 50 நாட்களாக டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோது அவன் மது பழக்கத்தை மறந்து நிம்மதியாக இருந்தான்.

இதனால் குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நிலைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை போராடி மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மீண்டும் மது பழக்கத்திற்கு ஆளாகி விட்டான். தினமும் மது குடித்து விட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறான். மதுக்கடைகள் மீண்டும் திறந்த பிறகு நான் நிம்மதி இழந்து நிற்கிறேன். இதனால் எனது மருமகள் அவனை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.

என்னை துன்புறுத்தி வரும் எனது மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையேல் நான் தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.

Tags : bartender ,opening ,drinking son ,Jaillangu ,jail , Liquor Store, Collector's Office, Thai Cathedral
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு