×

தூர்வாரும் பணியில் சுணக்கம்; கடைமடை வரை தண்ணீர் செல்லுமா?... விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சை: மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவதையொட்டி கடைமடை வரை தண்ணீர் சென்றடைய தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் பின்னர் போதிய மழை இல்லாததாலும், அணை நிரம்பாததாலும் காலந்தாழ்த்தியே திறக்கப்பட்டு வந்த மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி திறக்கப்படுகிறது.

காவிரி டெல்டா பாசனத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறப்பது இது 16வது முறையாகும். மேட்டூர் அணை பாசனத்தை நம்பி தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், பாண்டிச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் பகுதியிலும் நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் எக்டேருக்கும் அதிகமான பரப்பில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் உணவு தானிய கொள்முதலில் இப்பாசன பகுதி மிக பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் விரைவில் தொடங்க உள்ள நிலையில் கர்நாடகா அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து இருக்கும் என பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டாலும் கல்லணைக்கால்வாயில் கடைசி வரை பாசன நீர் சென்றடைய 2 மாதங்களுக்கு மேலாகும்.

கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய தாலுகாக்களில் 2 லட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி ெபறுகிறது. தற்போது கல்லணைக்கால்வாய் தூர்வாரும் பணிக்காக₹7 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஆறில் ஒரு பங்கு கூட இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள ஏரி, குளங்கள் மூலம் தான் பெரும்பாலான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

எனவே கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வாய்க்கால்கள் தூர்வாரும் பணியோடு கல்லணைக் கால்வாய் பாசன பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும். டெல்டாவில் முழுமையான பரப்பில் குறுவை சாகுபடி நடைபெறுவதற்கு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் உதவ வேண்டும் என 11 மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விதை நெல் வாங்க விவசாயிகள் தீவிரம்
குறுவை சாகுபடியை விவசாயிகள் மறந்து போய்விட்ட நிலையில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் உற்சாகமடைந்த விவசாயிகள் குறுவை நெல் விதை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறுவைக்கு ஏற்ற ரகமான ஆடுதுறை 36 ரக நெல் விதையை தனியார் வியாபாரிகளிடம் மூட்டை ஒன்றுக்கு (30கிலோ) ரூ.1,150க்கு வாங்கி வருகின்றனர். வேளாண்மை துறை விவசாயிகளுக்கு விதைநெல் வழங்குவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் டெல்டடா பகுதி விவசாயிகள் குறுவை விதை நெல்லை தனியார் வியாபாரிகளிடம் வாங்கி வருகின்றனர். எனவே குறுவை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு கூடுதலான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Euphoria ,store , Impetus, work; Water, water
× RELATED மார்த்தாண்டத்தில் சாலையில் ஓடும் அணை...