×

சோதனை சாவடியில் அனுமதி மறுப்பால் ஆப்சென்ட்; சொந்த வாகனங்களில் செல்லும் அரசு அலுவலர்களுக்கு சிக்கல்: கூடுதல் பஸ்களை இயக்குவதே நிரந்தர தீர்வாகும்

நெல்லை: சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனங்களில் வரும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற அரசு துறை அலுவலர்கள் மாவட்ட எல்லை தாண்டி பணிக்கு வருவதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அனுமதி மறுக்கப்பட்டு திரும்புபவர்கள் தினமும் ஆப்சென்ட் ஆகும் நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 18ம் தேதி 4வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்ட அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வரவேண்டும் ஷிப்டு முறையில் பணியாளர்கள் 2 நாட்கள் தொடர்ச்சியாக பணி செய்யவேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அதே நேரத்தில் உள்மாவட்ட அளவில் பயணிக்க இ பாஸ் தேவை இல்லை. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் தேவை எனவும் ெதரிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்ப மாவட்ட தலைநகரங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கும் அருகே உள்ள மாவட்ட தலைநகர் மற்றும் அந்த மாவட்ட முக்கிய நகரங்களுக்கும் ஒன்று அல்லது சில இடங்களில் 2 பஸ் என்ற அளவிலேயே இயக்கப்படுகிறது. இதில் அடித்து பிடித்து இடம் பிடித்து ஏறுபவர்கள் அடையாள அட்டையை காட்டி டிக்கெட் எடுத்து பயணிக்கின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு மாவட்ட எல்லையை கடந்து வருவதில் சிக்கல் இல்லை.

தற்போது விடப்படும் முக்கிய வழித்தட அரசு பஸ்கள் அனைத்திலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. 20 பேர் தான் பயணிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூடுதல் அரசு அலுவலர்கள் நெருக்கியபடி அமர்ந்தும் நின்று பயணிக்கும் நிலை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. திருச்செந்தூர் மார்க்கத்தில் ஒரு பஸ் மட்டுமே ெநல்லையில் இருந்து இயக்கப்படுகிறது. இதில் செல்லும் போதும் மாலையில் வரும்போதும் அதிகளவில் அரசு ஊழியர்கள் வரும் நிலை உள்ளது. இதுபோலவே மற்ற வழித்தடங்களிலும் நீடிக்கிறது.

இதை தவிர்க்க விரும்பும் அரசு ஊழியர்களும், மாவட்டத்தின் உள் கிராம பகுதிகளில் இருந்து வருபவர்களும் தங்களது இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் அலுவலகங்களுக்கு வருகின்றனர். இவ்வாறு அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து அலுவலகங்களுக்கு வரும் போது அவர்கள் சோதனை சாவடிகளில் பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. சில சோதனை சாவடிகளில் அரசு அலுவலர் பல்கலைக்கழக ஊழியர், வங்கி ஊழியர் என்று அடையாள அட்டையை காட்டினாலும் இ பாஸ் எங்கே என கேட்கும் நிலை உள்ளதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு செக்போஸ்ட் கடந்து வரமுடியாத நிலை உள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து அரசு பஸ்சும் இயக்கப்படவில்லை. 50 சதவீத  ஊழியர்கள் வரவேண்டும் என்றாலும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தற்காலிக ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. முழுவதுமான தற்காலிக ஊழியர்கள் பணிக்கு வரலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். சோதனை சாவடிகளில் அனுமதியின்றி திரும்புபவர்கள் தங்களுக்கு ஆப்சென்ட் விழுகிறது.

அல்லது தற்செயல் விடுப்பு கழிக்கப்படுகிறது என வருந்துகின்றனர். எனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து எல்லா வகையான அரசு துறை அலுவலக ஊழியர்கள் செல்ல கூடுதல் அரசு பஸ்களை இயக்கவேண்டும். மேலும் சொந்த வாகனங்களில் வரும் அரசு ஊழியர்களுக்கு தடையற்ற அனுமதியை மாவட்ட எல்லையில் திறந்துவிடவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : checkpoint ,Appellant ,government officials ,Appellant Refusing Permission , Checkpoint, denial of permission, offense
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!