×

குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு உத்தரவு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமரமத்து பணிகளை கண்காணிக்கவும், தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும் 7 அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ககன்சிங் பேடி ஐஏஎஸ் அவர்களும் , திருவாரூர் மாவட்டத்திற்கு  ராஜேஷ் லகோனி ஐஏஎஸ் அவர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வி அபூர்வா ஐஏஎஸ் அவர்களும், கரூர் மாவட்டத்திற்கு ஐஏஎஸ் அவர்களும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு கார்த்திக் ஐஏஎஸ் அவர்களும், அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஐஏஎஸ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் குடிமரமத்து பணிகளையும் , தூர்வாரும் பணிகளையும் பணிகள் முடியும் வரை கண்காணிப்பார்கள் என்றும் அனைத்து அதிகாரிகளும் பணிகளை பார்வையிட்டு அறிக்கையை தலைமை செயலாளருக்கும் , அதன் நகல்களை பொதுப்பணித்துறை செயலாளருக்கும் , முதல்வர் அலுவகத்திற்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்பணித்துறை செயலாளர் அனைத்து சிறப்பு அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை விரைவுபடுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலாளர் அந்தந்த மாவட்டங்களின் முதன்மை பொறியாளர்களை, சிறப்பு அதிகாரிகளுடன் இணைத்து பணியாற்ற உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்ட காலஅவகாசத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கு செல்லும் போது தங்களது கார்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குருவை சாகுபடிக்காக திறந்துவிடப்படுகிறது. இந்த நீர் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் பயனடைய உள்ளனர். அதற்கு முன்னதாகவே அணைகள் மற்றும் ஏரிகளை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது இந்த 392 பணிகளை மேற்பார்வையிட 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : IAS officers ,Tamil Nadu , Citizenship, IAS officers, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...