×

அம்பன் புயலால் மேற்கு வங்கத்துக்கு ஏற்பட்ட சேதம் தேசியப் பேரிடருக்கும் அதிகமானது: மம்தா பானர்ஜி பேட்டி

மேற்குவங்கம்: அம்பன் புயலால் மேற்கு வங்கத்துக்கு ஏற்பட்ட சேதம் தேசியப் பேரிடருக்கும் அதிகமானது என்று கூறலாம். என் வாழ்வில் இதுபோன்ற புயலை நான் பார்த்தது இல்லை. மாநிலத்தில் 60 சதவீத மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான அம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது.

அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் புயலால் சேதமடைந்தன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹவுரா போன்றவை புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை புயலுக்கு 80 பேர் உயிரிழந்துள்ளனர் என மேற்கு வங்க அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையி்ட்டு ரூ.1000 கோடி உடனடி நிவாரணம் அறிவித்தார். முன்னதாக விமான நிலையத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்கத்தை தாக்கிய அம்பன் புயல் போன்றதை என் வாழ்வில் இதுவரை நான் பார்த்தது இல்லை. தேசியப் பேரிடரைவிட அதிகமான சேதம் என்றுதான் குறிப்பிட வேண்டும். மாநிலத்தில் அம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின் மீண்டும் இயல்புநிலை திரும்ப சிறிது காலம் ஆகும். ஏறக்குறைய 8 மாவட்டங்களைப் புயல் சீரழித்துவிட்டது. 60 சதவீத மக்கள் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதனால் 6 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை நான் மிகப்பெரிய பேரழிவு என்றுதான் சொல்வேன். மாநில அரசும், அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். போலீஸார் ஓய்வின்றி உழைக்கிறார்கள். மூன்று சவால்களுக்கு எதிராகப் போராடுகிறோம். லாக்டவுன், கரோனா வைரஸ், இப்போது இந்தப் பேரழிவால் கிராமங்கள் முழுமையும் புயலால் அழிக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள சூழலில் எந்தத் தகவலும் தரமுடியாது என தலைமைச் செயலாளர் விரிவான சேத அறிக்கையைத் தயார் செய்து பிரதமர் மோடியிடம் அளிப்பார். பிரதமர் மோடியுடன் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட இருக்கிறேன். இதுதவிர சனிக்கிழமை நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் செல்கிறேன். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புயல் குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். அவருக்கு மேற்குவங்க மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Tags : West Bengal ,Amban Storm ,Mamta Banerjee ,Mamta Banerjee Interview , Amban Storm, West Bengal, Damage, National Disaster, More, Mamta Banerjee Interview
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...