×

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை: கனிமொழி ட்விட்

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் அருகில் உள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது.99 நாட்களை கடந்த நிலையில் 100வது நாளில் போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர்.  இந்நிலையில் போராட்டக் குழுவினரை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் போராட்ட குழுவில் ஒரு பகுதியினர் மட்டும் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே ஒருநாள் முழுவதும் தர்ணா நடத்திக் கொள்வதாக உறுதியளித்தனர்.

ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.  இந்த துப்பாக்கி சூட்டில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டன், மினிசகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்நோலின், தாமோதரநகரைச் சேர்ந்த மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், அன்னை வேளாங்கன்னிநகர் அந்தோணிசெல்வராஜ், புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மில்லர்புரம் கார்த்திகேயன், திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி, சிவந்தாகுளம் ரோடு கார்த்திக், மாப்பிள்ளையூரணி காளியப்பன், உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், சாயர்புரம் செல்வசேகர் ஆகிய 13 பேர் பலியாயினர்.

இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு சிலர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி எம்பியான கனிமொழி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. கலவரத்தைக் கட்டுப்படுத்த எனும் பொய்யைக் கட்டவிழ்த்து.

போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கூறினார்.


Tags : Mt ,firing ,Sterlite ,plant , Sterlite plant, shooter, melancholic
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...