×

கேரளாவில் 28 பகுதிகளில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளா: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. அங்கு இதுவரை 690 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். அதில் 510 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கேரளாவில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 8 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 3 பேருக்கும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேருக்கும், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது. நேற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 5 பேர் வயநாடு மாவட்டத்தையும், தலா ஒருவர் கோட்டயம், எர்ணாகுளம் கோழிக்கோடு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆகும். 510 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் 5,495 பேர், கப்பல் மூலம் 1,621 பேர், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 68,844 பேர், ரயில்கள் மூலம் 2,136 பேர் என இதுவரை கேரளாவுக்கு மொத்தம் 78,096 பேர் வந்துள்ளனர். தற்போது பல்வேறு மாவட்டங்களில் 80,138 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 79,611 பேர் வீடுகளிலும், 527 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். நேற்று நோய் அறிகுறியுடன் 153 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 49, 833 பேரின் உமிழ்நீர் மாதிரியைப் பரிசோதனை செய்ததில் 48,276 பேருக்கு நோய் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் அதிகமுள்ள 6,540 பேரின் உமிழ்நீர் மாதிரியைப் பரிசோதனை செய்ததில் 6,265 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. கடந்த 24 நேரத்தில் மட்டும் 1,798 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கேரளத்தில் புதிதாக 3 பகுதிகள் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருக்கடீரி, ஸ்ரீகிருஷ்ணாபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தர்மடம் ஆகிய இடங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்தால் தற்போது கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 28 ஆகும் என அமைச்சர் ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.

Tags : Shylaja ,coronavirus outbreak ,regions ,Kerala , Shylaja, Minister of Health, Kerala, 28th Area, Coronal Dissemination, Information
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை