×

கொரோனா பாதிப்பு எதிரொலி: ராணுவ செலவினத்தை 6.6% அளவுக்கு மட்டுமே அதிகரித்தது சீனா

பீஜிங்: கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தனது ராணுவ செலவினத்தை 6.6% அளவுக்கு மட்டுமே அதிகரித்துள்ளதாக சீன அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. அந்நாட்டில் மூடப்பட்டிருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 84 சதவீதத்திற்கு மேல் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

அவற்றில்  உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான  காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் சரிந்துள்ளது. ராணுவ கொள்முதல், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட செலவினங்களில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக 2 ஆம் இடத்தில் சீனா இருக்கிறது. இந்த நிலையில் கொரானாவால் சீனப் பொருளாதாரம் 6.8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தாலும், கடந்த ஆண்டு 7.5 சதவிகிதமாக இருந்த ராணுவ செலவின வளர்ச்சி இந்த ஆண்டு புள்ளி 9சதவிகிதம் என்ற அளவிற்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வலிமையை காட்டும் அடையாளமாக ராணுவம் இருக்க வேண்டும் என்ற அதிபர் ஜி ஜின்பிங் கொள்கைக்கு ஏற்ப நெருக்கடியான சூழலிலும் ராணுவ செலவினம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் உண்மையான ராணுவச் செலவு பல மடங்கு இருக்கும் எனவும் அதை சீனா வெளிக்காட்டுவதில்லை எனவும் துறை சார்ந்த வெளிநாட்டு வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Corona ,China , Corona impact, military spending, China
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...