×

‘தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் ஓவரா வீசுது...’ காற்றாலைகளில் மின் உற்பத்தி ‘கிடுகிடு’: ஒரு நாள் உற்பத்தி 8 ஆயிரம் யூனிட் ஆக உயர்வு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், காற்றாலைகளில் ஒரு நாள் மின் உற்பத்தி 8 ஆயிரம் யூனிட் ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள கணேசபுரம், முத்துசங்கிலிபட்டி, ஆசாரிபட்டி, நல்லமுடிபட்டி, ஒக்கரைபட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் மூலம் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஆண்டிபட்டி, ராஜதானி, கண்டமனூரில் செயல்படும் துணை மின் நிலையத்திற்கு சப்ளை செய்கின்றனர். இதற்காக அரசிடமிருந்து யூனிட் வீதம் பணம் பெற்றுக் கொள்கின்றனர்.
கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதற்கு முன், மே மாத இறுதியில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கும்.  இதன்படி, கடந்த 4 நாட்களாக தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசத் தொடங்கியுள்ளது.

இதனால் ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள காற்றாலைகளில் மின்உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் புதிய காற்றாலைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து காற்றாலை பணியாளர்கள் கூறுகையில், ‘‘தற்போது தென்மேற்கு திசையில் இருந்து காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை வீசுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும். முன்பு ஒரு காற்றாலையின் ஒருநாள் மின்உற்பத்தி 1,000 முதல் 1,500 யூனிட்டாக இருந்தது. ஆனால், தற்போது 8,000 யூனிட்டாக உயர்ந்துள்ளது. பருவக்காற்றின் வேகம் கூட, கூட காற்றாலைகளில் மின் உற்பத்தியும் அதிகரிக்கும். தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்படுகிறது’’ என்றனர்.


Tags : monsoon ,Windmills Southwest , Southwest monsoon,honeycomb, ovara blows ,power generation, windmills
× RELATED கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை