×

சிவகிரி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

சிவகிரி: சிவகிரி வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேரை கைது செய்த வனத்துறையினர், ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகப் பகுதிக்கு உட்பட்ட கருப்பசாமி கோயில் பீட் பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் செந்திலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிவகிரி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகன், வனக் காப்பாளர்கள் இம்மானுவேல், சுதாகர், பாரதி கண்ணன், வனக்காவலர் செல்வராஜ்,  வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆனந்தன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரையா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 8 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பன்றியை வேட்டையாடி கறிவைத்து சாப்பிட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள்,  சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சேர்ந்த ராமேஷ்வரன் (65), சமுத்திரம் (45), ராமேஷ்வரன் (64), ஜேசு (43), ரவி (54), கண்ணன் (48), காளிமுத்து (41), மாடசாமி (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் கைதுசெய்த வனத்துறையினர் காட்டுப்பன்றி கறி மற்றும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைப் கைப்பற்றினர். மேலும் 8 பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags : forest ,Sivagiri , Eight people , wild boar,Sivagiri forest, Rs 2.40 lakh
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...