×

கொரோனா ஊரடங்கால் கடுமையான பாதிப்பு மூலப்பொருட்கள் வாங்க நிதியின்றி தள்ளாடும் பிரம்பு கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள்: மத்திய அரசின் கடனுதவி வழங்க கோரிக்கை

வாலாஜா:  கொரோனா ஊரடங்கால் மூலப்பொருட்கள் வாங்க நிதியின்றி தள்ளாடும் பிரம்பு கைவினை பொருள் தயாரிப்பாளர்கள் மத்திய அரசின் கடனுதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் பலநூற்றாண்டு காலமாக பிரம்பு கைவினை பொருட்கள் தயாரித்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வாலாஜாவில் பிரம்பு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு முக்கிய தொழிலாக விளங்குவதால், வாலாஜாபேட்டை பிரம்பு தொழிலாளர்கள் குடிசை தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் பிரம்பு கைவினை பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் இது ஒன்றுதான். இந்தியாவில் இதுபோன்று பிரம்பு கைவினை பொருட்கள் தயாரிப்பு கூட்டுறவு சங்கம் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்பு பொருட்களை செய்வதற்கான மூலப்பொருட்கள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டா, அசாம் மாநிலம் மற்றும் தமிழகத்தில் சீர்காழி ஆகிய பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரம்பு பொருட்களை கொள்முதல் செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பிரம்பு ெபாருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மூலப்பொருள் வாங்குவதற்கும் நிதியில்லாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வாலாஜாவில் உள்ள பிரம்பு தயாரிப்பு தொழிலாளர்கள் கூறுகையில், ‘பிரம்புகள் பயன்படுத்தி சுற்றுலா பயணகூடை, பூஜைகூடை, தட்டு, காவல்துறை தற்காப்பு கேடயம், ஈசிசேர், லாம்ப்செட், ஊஞ்சல், சோபா மற்றும் டேபிள் செட் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட கைவினை பொருட்களை தயாரித்து வருகிறோம். எங்களது கூட்டுறவு சங்கத்தில் 243 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதுதவிர 650 ேபருக்கு பிரம்பால் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டு, தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் தேவையான மூலப்பொருள் கொள்முதல் செய்ய போதுமான நிதி ஆதாரம் இல்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆகவே மத்திய அரசு புதியதாக அறிவித்துள்ள கடனுதவியை நேரடியாக இந்த சங்கத்திற்கு வழங்க வேண்டும்’ என்றனர்.

63 ஆண்டுகால கூட்டுறவு சங்கம்
வாலாஜாபேட்டை பிரம்பு தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1957ம் ஆண்டு வாலாஜாபேட்டை பிரம்பு தொழிலாளர்கள் குடிசை தொழில் கூட்டுறவு சங்கம் ெதாடங்கப்பட்டது. அதன்படி இந்த சங்கம் 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சங்கத்தில் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் வாலாஜா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் வைத்து பிரம்பால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : craft makers ,Corona ,government ,makers , Coronam,crawling,buy raw materials,federal aid
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...