×

விளையாட்டு பொருட்கள் விற்பனை சரிவு

கோவை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ‘சம்பர் கேம்ப்’ இல்லாத காரணத்தினால் விளையாட்டு பொருட்களின் விற்பனை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொதுவாக ஏப்ரல், மே என கோடை காலத்தில் விடுமுறை அளிக்கப்படும். இந்த கோடை காலத்தில் தடகள போட்டிக்கான பயிற்சிகள், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு ‘சம்மர் கேம்ப்’ எனப்படும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படும். மேலும், கல்லூரி, பள்ளி மாணவர்கள் கிரிக்கெட், கேரம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அதிகளவில் ஆர்வம் காட்டுவார்கள். கோடை காலத்தில் அதிகளவில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து போன்ற போட்டிகளும் நடத்தப்படும். இதில், வெற்றி பெரும் நபர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இதனால், விளையாட்டு பொருட்கள் மற்றும் உபகரணம் வாங்குவதற்கு கடைகளில் வீரர், வீராங்கனைகள் குவிவது வழக்கம்.

இவர்கள் விளையாட்டு போட்டிக்கு தகுந்தபடி ஷூ, டி-சார்ட், கிரிக்கெட் பேட், பால் என அனைத்து விதமான பொருட்களையும் வாங்குவார்கள். மேலும், வெற்றிக்கோப்பைகளும் வாங்குவார்கள். இதன் காரணமாக, கோடை காலத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு விளையாட்டு பயிற்சி முகாம்கள் அடியோடு ரத்து செய்யப்பட்டன. ஒரே இடத்தில் பலர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்த அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. விளையாட்டு மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வீரர்கள் பயிற்சியும் மேற்கொள்வதும் இல்லை.

இதனால், விளையாட்டு பொருட்களை வாங்க யாரும் வரவில்லை. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை அடியோடு முடங்கியது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால், ஒருசில சிறிய அளவிலான விளையாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை துவங்கியுள்ளது. இந்த வியாபாரம், கடை வாடகைக்குகூட போதவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து கோவை வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள விளையாட்டு பொருட்கள் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், “வழக்கமாக, ஏப்ரல், மே மாதத்தில் அதிகளவில் ஆர்டர் வரும். ஆனால், இம்முறை ஆர்டர் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. கொரோனா ஊரடங்கால் வியாபாரம் முழுமையாக நடக்கவில்லை. வாங்கிப்போட்ட சரக்குகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதுவரை இப்படி ஒரு சரிவை சந்தித்தது இல்லை’’ என்றார்.

Tags : Sporting,goods sales, decline
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...