×

குமரியில் செங்கல்விலை கிடுகிடு உயர்வு: மழை பெய்தால் மேலும் அதிகரிக்கும்

நாகர்கோவில்: குமரியில் செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்தி அதிகம் இருந்தும்  விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் தாழக்குடி,  திட்டுவிளை  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700  செங்கல் சூளைகள்  செயல்பட்டு  வருகின்றன. இங்குள்ள மண் வளம் காரணமாக இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் தரம் அதிகம். எளிதில் உடையாது. எனவே குமரி மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் செண்பகராமன்புதூர் பகுதி செங்கற்களுக்கு தனி மவுசு உண்டு. தற்போது குமரியில் குறிப்பாக தோவாளை தாலுகாவில் செங்கல் சூளை தொழில் கொடிகட்டி பறக்கிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி பீகார்,  அசாம், ஜார்க்கண்ட் உள்பட வெளி  மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன்   தங்கி  வேலை செய்து வருகிறார்கள். தினக்கூலி என்பதற்கு பதில் வெளிமாநில தொழிலாளர்கள் உற்பத்திக் கேற்ற ஊதியம் என்ற ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா காரணமாக  மார்ச் 25ல்  இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட  நிலையில் செங்கல் சூளை தொழிலும்  மூட உத்தரவிடப்பட்டது. ஆனாலும்  பெரும்பாலான சூளைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் தொடர்ந்து  பணியாற்றி வந்தனர்.  தொழிலாளர்களின் அத்தியவாசிய தேவைகளை  உரிமையாளர்களே செய்து கொடுத்தனர். எனவே  செங்கல் சூளை உரிமையாளர்களும் உற்பத்தியை நிறுத்தவில்லை.  இதனால், பெரும்பாலான சூளைகளில் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு, மழையில் நனையாதபடி பாதுகாப்பாக தென்னங்கீற்றுகள் கொண்டு மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. கொரோனா காரணமாக வழக்கத்தை விட இருமடங்கு செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வில், செங்கல் சூளைகள் செயல்படவும் கட்டுமான பணிகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதர கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து செங்கற்களும் ₹4லிருந்து ₹4.80 ஆக விலை உயர்ந்துள்ளது. தற்போது செங்கற்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடையில் அக்னி நட்சத்திர காலத்திலும், மழை பெய்து வரும் நிலையில், பருவ மழை தொடங்கினால், செங்கல் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும். எனவே செங்கற்கள் விலை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணி
செங்கல் சூளைகளில் தினசரி சம்பளம் என்பதற்கு பதில் தற்போது ஒப்பந்தம் முறையில் வெளிமாநில பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதனால், பகல் மட்டுமின்றி இரவிலும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மண்ணில் இருந்து செங்கல் அச்சில்  வார்க்கும் (இதனை செங்கல் அறுப்பது என்கின்றனர்)  பணியினையும், பின்னர்  இவர்கள்  தயாரித்த பச்சை செங்கல்களை சூளையில் அடுக்குவது என இருவகையாக  ஒப்பந்தம் விடப்படுகிறது. இதற்காக ஒரு செங்கல்லிற்கு ரூ.1 வீதம் கூலியாக  வழங்கப்படுகிறது.

விறகு வெட்ட நவீன இயந்திரம்
* கால மாற்றத்திற்கேற்பசெங்கல் சூளை தொழில்களிலும் நவீன நுட்பங்கள் வந்துள்ளன. விறகுகளை வெட்டுவதற்கு ஹைட்ராலிக் இயந்திரம் வந்துள்ளன.  இவற்றில் பெரிய பெரிய மரத்துண்டுகளை சில நிமிடங்களில் சிறிய விறகுகளாக வெட்டப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ரூ. ஆயிரம் முதல் வாடகை பெறப்படுகிறது.
* செங்கற்களை அடுக்கவும், லோடிங் செய்யவும் நவீன இயந்திரங்கள் வந்துள்ளன. இதனால், முன்பு ஒரு சூளைக்கு  20 ஆயிரமாக இருந்த செங்கற்கள் தற்போது குறைந்த பட்சம் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளன. இதற்கிடையே  தினசரி 3 லட்சம் செங்கற்கள் வரை ஒரு சூளையில் உற்பத்தி செய்யும் நவீன சூளைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Tags : Rainfall ,Kumari , Increase ,brick wall, Kumari,Rainfall , increase further
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...