×

83 நாட்களுக்குப் பின் வெளி மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம்: மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் சேதங்களைப் நேரில் ஆய்வு செய்கிறார்!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் அம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

அம்பன் புயல் கோர தாண்டவம்


வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம் வங்கதேச கடல் பகுதி வழியாக கரையைக் கடந்தது. இந்த புயலில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்த நிலையில், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.

அம்பன் புயலுக்கு மேற்கு வங்கத்தில் 80 பேர் பலியாகியுள்ளனர். கொல்கத்தாவில் சாலைகள், விமான நிலையம் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. 4 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் நாசமாகின. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களை அகற்றி சீரமைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவைப் பொருத்தவரை உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும், கடலோர கிராமங்களைச் சேர்ந்த 44 லட்சம் பேர் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாவட்டங்களில் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி பயணம்

 இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 80 பேரின் உயிரைக் காவு வாங்கி, ஏராளமான சேதத்தை ஏற்படுத்திய அம்பன் சூப்பர் புயலின் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று காலை கொல்கத்தா சென்றடைந்தார். கடந்த 83 நாட்களுக்குப் பின் பிரதமர் மோடி டெல்லியை விட்டு வெளிமாநிலத்துக்குச் சென்றுள்ளார். கடைசியாக கடந்த பிப்ரவரி 29-ம் தேதி உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ், சித்ரகூட் நகரங்களுக்கு பிரதமர் மோடி பயணம் சென்றார். அதன்பின் இப்போதுதான் டெல்லியை விட்டு வெளி மாநிலம் சென்றார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.அதன்பின் முதல்வர் மம்தா பேனர்ஜியுடன் சேர்ந்து, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். மேற்கு வங்கப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒடிசாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு விமானம் மூலம் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து பார்வையிட உள்ளார்.

Tags : visit ,Modi ,state , PM Modi, Travel, West Bengal, Amban, Storm, Damages, Survey
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...