×

ஊரடங்கில் ஓய்ந்தது... மீண்டும் வந்தது... இளைஞர்களை குறிவைத்து நடக்கும் போதை மாத்திரை, குட்கா விற்பனை: சேலம் மண்டலத்தில் தலைதூக்கும் அவலம்

சேலம்: சேலம் மண்டலத்தில் ஊரடங்கில் ஓய்ந்திருந்த போதை மாத்திரை, குட்கா விற்பனை மீண்டும் துவங்கியுள்ளது. இது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு, மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது 100 சதவீத உண்மை. அதே நேரத்தில் கடந்த 50நாட்களாக குறைந்து போன காற்று மாசு, மரங்களில் கூடுகட்டிய பறவைகள், மதுவை மறந்த மனிதர்கள், பாரம்பரிய உணவுகளை நாடிய குடும்பங்கள், சக மனிதர்களுக்கு உதவிய உள்ளங்கள் என்று பல நன்மைகளும் நடந்துள்ளது. இந்த வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு 50 நாட்களாக 80சதவீதம் பேர், அதன் வாடை இல்லாமல் இருந்தது ஒரு அரிய நிகழ்வாகவே கருதப்பட்டது. ஆனால் ஊரடங்கு தளர்வால் கடந்த 7ம்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது நடந்த கொண்டாட்டமும், மது வாங்க அலைமோதிய கூட்டமும், இந்த எண்ணத்தை சுக்குநூறாக்கி விட்டது. தற்போது காலை 10மணி முதல் இரவு 7மணிவரை  செயல்படும் மதுக்கடைகளில் குடிமகன்கள் திரண்டு பாட்டில்களை அள்ளிச் செல்வது வழக்கமாகி விட்டது.

 மதுக்கடைகளில் அடித்தட்டு மக்கள், கூலித்  தொழிலாளிகள், நடுத்தரவாசிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், சேலம் மண்டலத்தில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை, குட்கா, புகையிலை பொருட்கள் வியாபாரம் மீண்டும் களை கட்ட ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள மருந்து கடையில் வாங்கிய  மாத்திரை, சொலுசனால் போதையேற்றிய வாலிபர்களில் ஒருவர், பரிதாபமாக இறந்தது அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று ₹30 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் போதைப்  பொருட்கள் சேலத்தில் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓய்ந்திருந்த போதை பொருள் விற்பனைக்கு மீண்டும் அச்சாரமிடத் தொடங்கி விட்டனர் என்பதை இது உணர்த்துகிறது. இது போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஆர்வலர்கள்.

இது குறித்து போதை எதிர்ப்பு விழிப்புணர்வு ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘போதைப்பொருள் என்பது அற்ப மகிழ்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் இயல்பாக தோன்றினாலும், கால போக்கில் மனிதனை அடிமையாக்கி விடுகிறது. இது உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் தீங்கு விளைவிப்பதோடு, பல்வேறு பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். இதனால் தனி மனிதன், குடும்பம், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை நாம் நினைத்தால் மாற்றலாம் என்பதை கடந்த 50நாட்களில் 80 சதவீதம் பேர் நிரூபித்துள்ளனர். இந்த நேரத்தில் தான், ஊரடங்கு தளர்வால், மீண்டும் இவையெல்லாம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே தொழில்கள் முடங்கி, வருவாய் இழந்து குடும்பங்கள் தவித்து வரும் நிலையில், மீண்டும் போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்ற உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் குடும்பங்கள் சந்திக்கப்போகும் பல பிரச்சினைகளில் இருந்தும் மீள முடியும்,’’ என்றனர்.

இதயம், நுரையீரல் பாதிக்கும் அபாயம் -மருத்துவர் அதிர்ச்சி தகவல்  
மனநல மருத்துவர் சங்கர் கூறுகையில், ‘‘இன்றைய கால கட்டத்தில் ஒரு சில இளைஞர்கள் மது  போதையை தவிர்த்து, வலி நிவாரண மாத்திரைகள், மயக்க மருந்துகள் மூலம் போதையில் திளைக்கின்றனர். போதை அதிகமாக தேவைப்படும் போது போதை ஊசியை பயன்படுத்துகின்றனர். வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்தும் போதை ஏற்றி கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து உடலுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், ஊசி போடும் போது கைகளில் வீக்கம் ஏற்பட்டு, கட்டிகள் ஏற்பட்டு பாதிப்புகள் அதிகரிக்க கூடும். இதனால் மனநல பாதிப்புகளும் ஏற்படும்’’ என்றார்.

டாக்டர் பரிந்துரையின்றி மருந்து வழங்கினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், ‘‘டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் ஒரு சில கடைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இளைஞர்களுக்கு போதைக்காக  மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். இதனால் இளைஞர்களின் வாழ்க்கை திசைமாறி கொலை, கொள்ளை போன்ற தவறான பாதையை நோக்கி சென்று விடுகிறது. எனவே, மருந்து கடை உரிமையாளர்கள் டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகள் வழங்கினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Tags : sale ,kutka ,zone ,Salem Zone ,Salem , Curfew ,Salem Zone
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...