×

தமிழகத்தில் 50 நாட்களில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல் ரூ.3 ஆயிரம் கோடியில் ஜவுளி உற்பத்தி பாதிப்பு: உற்பத்தியாளர்கள் வேதனை

சேலம்: கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால் 50 நாட்களில் ₹3 ஆயிரம் கோடிக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர், விருதுநகர், கரூர் உள்பட பத்து மாவட்டங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் உள்ள விசைத்தறிகளில் ஏற்றுமதி ரகமான காட்டன் ஜவுளிகள், ஜமுக்காளம், லுங்கி, டவல், கேரளா வேஷ்டி, சேலை, காட்டன் வேஷ்டி உள்பட பல ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் வெளிநாடுகள், மாநிலங்களுக்கும், உள்ளூரில் பல பகுதிகளுக்கும் செல்கின்றன.

ஜவுளி உற்பத்தி மூலம் ஒரு கோடிக்கும் மேலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பீதியால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டதால், ₹3ஆயிரம் கோடியில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விசைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர்கள் சேவா சம்மேளன தலைவர் அப்புசெட்டியார் கூறியதாவது:

இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி, விசைத்தறி, ஏர் லூம்ஸ் உள்ளன. இதில் தமிழகத்தில் விவசாயத்திற்கு இணையாக விசைத்தறி தொழில் வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. ஜவுளி உற்பத்தி மூலம் மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி கணிசமாக கிடைக்கிறது. விசைத்தறி தொழில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய காரணத்தால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன. அதேபோல் ஜவுளி உற்பத்தியில் உபதொழிலான சாயப்பட்டறை, நூல்கடை, காட்டன் மில் உள்பட பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்கள் வரவில்லை. இதேபோல் வெளிநாடு, வடமாநிலம், உள்நாட்டு ஆர்டரும் வரவில்லை. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு கோடிக்கும் மேலான தொழிலாளர்கள், போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 50 நாட்களில் ₹1500 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் ₹3 ஆயிரம் கோடிக்கு மேலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அப்புசெட்டியார் கூறினார்.

ரூ.1000 கோடியில் கைத்தறி ஜவுளி உற்பத்தி பாதிப்பு
தமிழகத்தில் சேலம், காஞ்சிபுரம், ஆரணி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். கைத்தறியில் காட்டன் வேஷ்டி, சேலை, பட்டு சேலை, வேஷ்டி, அங்கவஸ்திரம், துண்டு, ஜமக்காளம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக விசைத்தறி கூடம் போல், கைத்தறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களாக கைத்தறிகள் இயங்காததால், இத்தொழில் ஈடுபட்டுள்ள கைத்தறி நெசவாளர்கள் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும், ₹1000 கோடிக்கு மேல் கைத்தறி ஜவுளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

விற்பனையாக 3 மாதங்களாகும்
ஊரடங்கு காரணமாக ரூ.1500 கோடிக்கு மேலான ஜவுளிகள் ஆங்காங்கே தேக்கமடைந்துள்ளன. இந்த நிலையில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. விசைத்தறி கூடங்கள் திறக்கப்பட்டாலும் முழுமையாக செயல்படவில்லை. ஏற்கனவே இருப்பில் ஜவுளிகள் விற்க இன்னும் 3 மாதமாகும். அதனால் இப்போதைக்கு புதிய ஜவுளி உற்பத்தி அதிகமாக இருக்காது. நூல் மில், சாயப்பட்டறை, நூல்கடைகள், ஜவுளி ஏற்றுமதி முழுமையாக செயல்படவில்லை. அதனால் மூன்று மாதத்திற்கு ஜவுளி உற்பத்தி குறைவாக தான் இருக்கும் என்பதும் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்.


Tags : Tamil Nadu , Coronal disruption,Tamil Nadu's ,50-day curfew affects textile production
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...