×

முன்னறிவிப்பின்றி வழித்தடம் மாற்றியமைப்பு அருப்புக்கோட்டை டூ விருதுநகர் செல்ல பஸ் கட்டணம் ரூ.100: அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

அருப்புக்கோட்டை: அரசு அலுவலகங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்படும் என்றும் பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு பஸ் வசதி செய்து தரப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு விருதுநகர் செல்ல சிறப்பு பஸ்கள், கடந்த 19ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இரண்டு கட்டணமாக ரூ.40 மற்றும் ரூ.50 என வசூலிக்கப்படுகிறது. இதில் எம்.ரெட்டியபட்டியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு ஒரு பஸ்சும், நரிக்குடியிலிருந்து திருச்சுழி, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு ஒரு பஸ்சும், காரியாபட்டி, திருச்சுழி அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு ஒரு பஸ் என மூன்று பஸ்கள் அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு இயக்கப்பட்டது.

இதனால் அருப்புக்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் இருந்து அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களை விருதுநகருக்கு ஏற்றிச் சென்றனர். இதில் அருப்புக்கோட்டையில் இருந்து தான் 150க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் முன்னறிவிப்பின்றி மூன்று வழித்தடங்களில் இயக்கப்பட்ட பஸ்கள் அருப்புக்கோட்டைக்கு வராமல் வேறு வழித்தடத்தில் விருதுநகருக்கு சென்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் புதிய பஸ்நிலையத்தில் அரசு ஊழியர்கள் காலை 8 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் 10.30 மணியாகியும் பஸ் வரவில்லை. பின்னர் சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு சென்றனர். இப்பிரச்னையை அரசு ஊழியர்கள் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கண்ணன் கூறுகையில், அருப்புக்கோட்டையிலிருந்து தான் 40 சதவீத அரசு ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். பஸ்களை முறையாக இயக்காமல் வேறு வழியாக இயக்கியதால் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு ஊழியர்கள் பலமணி நேரம் பஸ் வராமல் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர்.

மேலும் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்ல முறையான பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். 19ம் தேதி அருப்புக்கோட்டை வழித்தடத்தில் இயக்கிய பஸ்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாவட்ட நிர்வாகம் மாற்றி அமைத்து விட்டது.நரிக்குடியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வருவதற்கு பதிலாக திருச்சுழி காரியாபட்டி, மல்லாங்கிணர் வழியாக விருதுநகருக்கு சென்றது. முன்னறிவிப்பின்றி ஊழியர்களின் தேவைகளை புரிந்து கொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் பஸ்சின் வழித்தடத்தை மாற்றி அமைத்ததே இந்த பிரச்சனைக்கு காரணம். அருப்புக்கோட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு பதில் அருப்புக்கோட்டையிலிருந்து நரிக்குடி செல்லும் பஸ்சில் ஏறி 100 கி.மீ சுற்றி கலெக்டர் அலுவலகம் செல்லும் அவலநிலை நேற்று ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையிலிருந்து நரிக்குடிக்கு 50 ரூபாயும், நரிக்குடியிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்ல 50 ரூபாயும் என மொத்தம் 100 ரூபாய் கட்டணம் அரசு ஊழியர்களிடம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களின் தேவையை புரிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது. எனவே, அருப்புக்கோட்டைக்கு தனியாக 2 பஸ்களை புதிய பஸ்நிலையத்தில் இருந்து விருதுநகருக்கு இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினார்.

ஊர் சுற்றி காட்டலாமா?
ராஜபாளையத்தில் இருந்து தினசரி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வரை மூன்று அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பஸ்சில் 28 பயணிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜபாளையத்திலிருந்து பஸ்கள் அந்தந்த வழித்தடங்களில் செல்லும்பொழுது அரசு அலுவல் பணிகளில் உள்ள அலுவலகங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலகத்திற்கு ராஜபாளையத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் செல்வதால் அனைவரும் அழகாபுரி வழியாக செல்லக்கூடிய பஸ்சில் மட்டும் பயணிக்க விரும்புகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், அழகாபுரி வழியாக செல்லக்கூடிய பஸ் விரைவாக செல்கின்றன. மற்ற இரண்டு பஸ்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சுற்றி வருவதால் பயணநேரம் வீணாகிறது. பெரும் அலைச்சல் ஏற்படுகிறது’’ என்றனர். அருப்புக்கோட்டையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்வதற்கு பதில் அருப்புக்கோட்டையிலிருந்து நரிக்குடி செல்லும் பஸ்சில் ஏறி 100 கி.மீ சுற்றி கலெக்டர் அலுவலகம் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Bus fare, Aruppukkottai, Virudhunagar
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்