×

ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதி மறுப்பு

பெரும்புதூர்: ராஜிவ்காந்தி நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த காங்கிரசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அக்கட்சியினர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு, பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அவரது நினைவு நாள் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அஞ்சலி செலுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சியினர், நேற்று காலை முதல் ராஜிவ்காந்தி நினைவிட வாசலில் கூடினர்.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் சமூக இடைவெளி மற்றும் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த திரண்டனர். அப்போது, நினைவிட நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பெரும்புதூர் போலீசார், அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து பெரும்புதூர் போலீசார், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, நினைவிட வளாகத்தில் கட்டுப்பாடுகளுடன் காங்கிரஸ் கட்சியினரை அனுதித்தனர். இதில் ஒரு சிலர், உள்ளே செல்லாமல் வந்த வழியாக திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.



Tags : Congress ,Rajiv Gandhi Memorial , Rajiv Gandhi Memorial, Congressman, Anjali
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...