×

ஊரடங்கு முடிந்து 18ம் தேதி முதல் பணிக்கு வந்த தலைமை செயலக ஊழியருக்கு கொரோனா

* அலுவலகத்துக்கு சீல்
* அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற மே 31ம் தேதி வரைஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த 18ம் தேதி (திங்கள்) முதல் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் தினசரி சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் தலைமை செயலகம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் வேலைக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

சென்னை, தலைமை செயலகம் வரும் ஊழியர்கள் பணிக்கு வரும்போது நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 18ம் தேதி தலைமை செயலகம் வந்த அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை செய்தபோது 30 பேருக்கு உடல் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சளி மாதிரி எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் செங்கல்பட்டில் இருந்து தலைமை செயலகத்துக்கு பணிக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் பணியாற்றி வந்த தலைமை செயலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பொது கணக்கு குழு அலுவலகம் முழுவதும் நேற்று காலை கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டதுடன், அந்த அலுவலகமும் இழுத்து மூடப்பட்டது. கொரோனா பாதித்த அரசு ஊழியர் உடனடியாக சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலக வளாகத்தில் இருந்துதான் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி எடுத்து வருகிறார்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட ஊழியர் பணியாற்றி வந்தது சட்டப்பேரவை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அலுவலகம் இருக்கும் 4வது கேட் வழியாகத்தான் அமைச்சர்கள், தலைமை செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தலைமை செயலகத்திற்குள் செல்வார்கள். தற்போது, தலைமை செயலக ஊழியர் ஒருவருக்கே கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Tags : chief executive officer ,Corona ,Secretariat , Chief Secretariat Staff, Corona, Ministers, IAS Officers
× RELATED நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும்...