நடிகர், நடிகை படங்களை தொடர்ந்து மாஸ்க் வடிவில் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து அசத்தல்: இன்னும் என்னென்ன கொரோனா ஸ்பெஷல் வரப்போகுதோ

சென்னை: நடிகர், நடிகை படங்களை தொடர்ந்து, மாஸ்க் வடிவில் கல்யாண அழைப்பிதழை அச்சடித்து அசத்தி வருகின்றனர். இன்னும் என்னென்ன கொரோனா ஸ்பெஷல் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் லாக் டவுனில் இருக்கிறது. கடந்த 4 மாதங்களாக மக்களோடு ஒன்றி விட்ட ஒரு பொருளாக மாஸ்க் மாறிவிட்டது. கடந்த காலங்களில் நோயாளிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த மாஸ்க்கள் இப்போது அனைவரும் அணிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 வெளிநாடுகளை பொறுத்தவரை சுகாதாரத்துறையினர் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விதமான மாஸ்களை அணிகின்றனர். ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் நுழைந்த பின்பு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் மாஸ்க் அணியாவிட்டால் அவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 இதற்கு பயந்து பலர் அவசரத்துக்கு கர்சீப்பை மாஸ்க்காக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் நோய் தொற்று உச்சகட்டத்தில் இருப்பதால் மாஸ்க் அணியாதவர்களை பார்த்தாலே பலர் அங்கிருந்து சில அடி தூரம் விலகி செல்கின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் வெளியில் வருபவர்கள் மாஸ்க் அணிய வேண்டிய நிலை உள்ளது.  

 தமிழகத்தை பொறுத்தவரை பலர் துவைத்து மீண்டும் உபயோகப்படுத்தக்கூடிய மாஸ்க் அணிவதை விரும்புகின்றனர். இதை பயன்படுத்தி வித விதமான மாஸ்க்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அதற்காக புதிதாக தனி கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. அந்த அளவுக்கு மாஸ்க் விற்பனை கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது.  

 இதனால் கர்சீப் கட்டியவர்கள் கூட கலர் கலர் மாஸ்க் அணிவதை விரும்புகின்றனர். தமிழகத்தில் எப்போதும் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, பனியன், சட்டை உள்ளிட்ட ஆடைகளில் அந்தந்த நடிகர், நடிகைகள் படத்ைத அச்சடித்து வெளியிடுவார்கள். அப்போது அவற்றின் விற்பனை கொடி கட்டி பறக்கும். அந்த பார்முலாவை இப்போது மாஸ்க்களிலும் கொண்டு வந்துவிட்டனர்.

 துணியால் தயாரிக்கப்படும் மாஸ்க்குகளில் நடிகர், நடிகைளில் படங்களை அச்சடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையிலான மாஸ்க் விற்பனை தமிழகத்தில் ஒரு வலம் வந்துவிட்டது. இப்போது ஒரு படி மேலே போய் திருமண அழைப்பிதழ்களாகவும் மாஸ்க்குகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  அதாவது, திருமண தம்பதிகளின் படத்தை மாஸ்க்குகளில் அச்சடித்து அழைப்பிதழ்களாக தயாரித்துள்ளனர். தற்போது இந்த வகையிலான மாஸ்க்குகளை திருமண வீட்டார் தங்கள் உறவினர்களுக்கு வழங்கி வருகின்றனர். வித்தியாசமாக இருப்பதால் இதுபோன்ற திருமண அழைப்பிதழ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

 இப்படி மாஸ்க்கில் தொடங்கி கொரோனா ஸ்பெஷல் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இன்னும் இதைப் போன்று என்னென்ன ஸ்பெஷல் வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.   இதுகுறித்து மாஸ்க் தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:  தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாஸ்க் இல்லாமல் ஒருவர் சென்றாலே அவர்களை அருகில் உள்ளவர்கள் ஒருமாதிரி பார்க்கும் நிலை தான் உள்ளது. அதனால் பெரும்பாலானோர் மாஸ்க் அணிய தொடங்கியுள்ளதால் வித விதமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

 நடிகர், நடிகைகளின் படத்துடன் மாஸ்க் தயாரித்து விற்பனை செய்தோம். இளசுகளின் மத்தியில் அமோக விற்பனையானது. இப்போது திருமண அழைப்பிதழாக அச்சடித்து வெளியிட்டு வருகிறோம். அதற்கும் நல்ல ஆர்டர் கிடைத்து வருகிறது. இது மக்கள் மத்தியில் ஒருவித விழிப்புணர்வாகவும் உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: