×

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு: தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை குறைவான மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இதற்கு முதல்வர் துறை ரீதியாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதே காரணம். தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான உயர்மட்டக்குழு முடிவு செய்யும். அதன்பின்புதான் பாடத்திட்டம் குறித்து ஆராயப்படும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். பல மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தம் செய்து முடிவுகள் அறிவிக்க உள்ளனர். ஆனால், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் ஜூன் 15க்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தும், 1ம் தேதி முதல் ரயில் போக்குவரத்தும் துவங்க உள்ளது. இதைக்கருத்தில் கொண்டுதான் தேர்வு பணிகளை திட்டமிட்டுள்ளோம். ஆரம்பத்தில் 3,684 தேர்வு மையங்கள் இருந்தன. தற்போது, 12,674 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இதுபற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : schools ,Sengottaiyan ,Tamil Nadu , Tamil Nadu, schools opening, Minister Sengottaiyan
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!