×

ராஜபாளையம் அருகே 75 தொழிலாளர் சிக்கினர் லாரி தார்ப்பாய்க்குள் மறைந்து மேற்குவங்கம் செல்ல முயற்சி

ராஜபாளையம்:  கேரளாவில் இருந்து ராஜபாளையம் வழியாக லாரியில் தார்ப்பாய்க்குள் மறைந்து இருந்தபடி சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 75 மேற்கு வங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்துள்ள விருதுநகர் - தென்காசி மாவட்ட எல்லையான சொக்கநாதன்புத்தூர் விலக்கு சோதனைச்சாவடியில் நேற்று மேற்கு வங்க பதிவு எண் கொண்ட லாரியை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரியில் தார்ப்பாய் வித்தியாசமாக மூடி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர். லாரியை முழு ஆய்வு செய்தபோது கிளீனர் உள்ளிட்ட 75 பேர் லாரியில் இருந்தது தெரிய வந்தது. இதில் 45 பேருக்கு மேற்கு வங்கம் செல்வதற்கு அனுமதி சீட்டு இருந்தது. மீதமுள்ள 30 பேருக்கு முறைப்படியான அனுமதி இல்லை.

 விசாரணையில், அனைவரும் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் கட்டிடம் உள்ளிட்ட கூலிப்பணி செய்து வந்துள்ளனர். இப்பகுதிக்கு லோடு இறக்குவதற்காக வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த டாரஸ் லாரியை வாடகைக்கு அமர்த்தி குறிப்பிட்ட தொகை கொடுத்து சொந்த ஊருக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். இதற்காக ஒருவருக்கொருவர் நெருக்கியடித்தபடி அமர்ந்து கேரளாவில் இருந்து பல்வேறு செக்போஸ்ட்களை கடந்து விருதுநகர் மாவட்ட எல்லைக்கு வந்தபோது சோதனையில் பிடிபட்டுள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட அவசர நிகழ்வு அலுவலர் செல்வக்குமார், அவர்களை செக் போஸ்ட் அருகில் உள்ள  தனியார் கல்லூரி வளாகத்தில் வைத்து விபரங்களை சேகரித்தனர். அங்கு வசதியில்லாததால் ராஜபாளையம் தனியார் கல்லூரியில் தங்க வைத்து அவர்களது மாநிலத்திற்கு அனுப்பும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rajapalayam ,lorry tarpaulin , ajapalayam, 75 Labor, Larry Tarpaayak, West Bank
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...